IPL 2026: பஞ்சாப்பை கீழே தள்ளிவிட்டு நம்பர் 1 சிம்மாசனத்தில் அமர்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரின் மகுடத்தை யார் சூடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல நாட்களாக முதலிடத்தில் அசைக்க முடியாமல் அமர்ந்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை கீழே தள்ளிவிட்டு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று நம்பர் 1 சிம்மாசனத்தை தட்டிப்பறித்துள்ளது. வெறும் வெற்றியோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் புதிய சாதனைகளை ஹைதராபாத் படைத்து வருவது மற்ற அணிகளை சிந்திக்க வைத்துள்ளது.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், கடந்த சில போட்டிகளாகத் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதால் பிளே ஆப் ரேஸ் சூடுபிடித்துள்ளது.

2026 ஐபிஎல் புள்ளிப்பட்டியல் (மே 6ஆம் தேதி போட்டியின் முடிவில்)
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 11 போட்டிகள் - 14 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.737
-
பஞ்சாப் கிங்ஸ் - 10 போட்டிகள் - 13 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.571
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 9 போட்டிகள் - 12 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 1.420
-
ராஜஸ்தான் ராயல்ஸ் - 10 போட்டிகள் - 12 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.510
-
குஜராத் டைட்டன்ஸ் - 10 போட்டிகள் - 12 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.147
-
சென்னை சூப்பர் கிங்ஸ் - 10 போட்டிகள் - 10 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.151
-
டெல்லி கேப்பிடல்ஸ் - 10 போட்டிகள் - 8 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.949
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 9 போட்டிகள் - 7 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.539
-
மும்பை இந்தியன்ஸ் - 10 போட்டிகள் - 6 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.649
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 9 போட்டிகள் - 4 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -1.076
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி 235 ரன்களைக் குவிக்க மிக முக்கிய காரணமாக இருந்த ஹென்றிச் கிளாசன், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 'ஆரஞ்சு தொப்பியை' தன்வசப்படுத்தியுள்ளார். 11 போட்டிகளில் 494 ரன்களைக் குவித்துள்ள கிளாசன் இப்போது ஐபிஎல் 2026 தொடரின் டாப் ஸ்கோரர் ஆவார். அவரைத் தொடர்ந்து ஹைதராபாத்தின் மற்றொரு புயல் அபிஷேக் சர்மா 475 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேஎல் ராகுல் 445 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், இஷான் கிஷன் 409 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஆர்சிபி அணியின் புவனேஸ்வர் குமார் 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி 'ஊதா நிற தொப்பியுடன்' முதலிடத்தில் நீடிக்கிறார். சிஎஸ்கே அணியின் அன்ஷுல் காம்போஜ் 17 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், ரன் விகித அடிப்படையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ககிசோ ரபாடா மற்றும் இஷான் மலிங்கா ஆகியோர் தலா 16 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
