IPL 2026 புள்ளிப்பட்டியலில் மெகா மாற்றம்.. பிளே ஆப் போகும் 4 அணிகள் எவை? சிஎஸ்கே வாய்ப்பு என்ன?
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, அதிரடியாக புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. குஜராத் அணியின் இந்த இமாலய வெற்றியால் புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கோப்பையை வெல்லும் முனைப்பில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப் போகும் அந்த 4 அதிர்ஷ்டசாலி அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே எகிறியுள்ளது. நடப்பு சீசனின் பிளே ஆப் வாய்ப்புகள் குறித்தும், புள்ளிப்பட்டியல் நிலவரம் குறித்தும் விரிவாக பார்ப்போம்.
ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 229 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி வெறும் 152 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி, தங்களது ரன் ரேட்டிலும் மிகப்பெரிய ஏற்றம் கண்டுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பிளே ஆப் வாய்ப்பை பொறுத்தவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குஜராத் அணியும் 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளதால் இந்த இரண்டு அணிகளுக்கும் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 3வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடனும், 4வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடனும் நீடிக்கின்றன.
அதேநேரம் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி தங்களது ரன் ரேட் கடுமையாக சரிந்ததால் 12 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு பரிதாபமாக தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகளில் வென்றால் மட்டுமே ராஜஸ்தான் அணி பிளே ஆப் செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.
10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் வென்றால் சிஎஸ்கே அணி எளிதாக முதல் 4 இடங்களுக்குள் நுழைய முடியும். ஆனால் புள்ளிப்பட்டியலில் கடைசி 3 இடங்களில் தவிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இனி இந்த அணிகள் மற்ற அணிகளின் வெற்றி வாய்ப்பை கெடுக்கும் வேலையை மட்டுமே செய்ய முடியும்.
2026 ஐபிஎல் தொடரின் தற்போதைய புள்ளிப்பட்டியல் நிலவரம் (மே 9 முடிவில்):
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 11 போட்டிகள் - 14 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.737
- குஜராத் டைட்டன்ஸ் - 11 போட்டிகள் - 14 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.228
- பஞ்சாப் கிங்ஸ் - 10 போட்டிகள் - 13 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.571
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 10 போட்டிகள் - 12 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 1.234
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 11 போட்டிகள் - 12 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.082
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 10 போட்டிகள் - 10 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.151
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 10 போட்டிகள் - 9 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.169
- டெல்லி கேப்பிடல்ஸ் - 11 போட்டிகள் - 8 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -1.154
- மும்பை இந்தியன்ஸ் - 10 போட்டிகள் - 6 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.649
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 10 போட்டிகள் - 6 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.934


Click it and Unblock the Notifications
