IPL 2026: தோற்றவுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் ப்ரீத்தி ஜிந்தா கடும் வாதம்.. சோகமாக அமர்ந்த பாண்டிங்
தரம்சாலா: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடர்ச்சியான 6-வது தோல்வியைச் சந்தித்து பிளே-ஆப் ரேசில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதை அடுத்து போட்டி முடிந்த உடன் ஆடுகளத்தில் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் காரசாரமாக பேசியது சர்ச்சையாக மாறி உள்ளது. பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அப்போது தனிமையாக தலை குனிந்து அமர்ந்து இருந்தார்.
நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால், பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தற்போது நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அசைக்க முடியாத பலத்துடன் இருந்த அந்த அணி, இப்போது வரிசையாகப் போட்டிகளைத் தாரை வார்த்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2026 ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றி, 1 போட்டி ரத்து எனத் தோல்வியே காணாத அணியாக பஞ்சாப் கிங்ஸ் வலம் வந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 73 ரன்களும், விராட் கோலி 58 ரன்களும் விளாசினர். கடினமான இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு சஷாங்க் சிங் 56 ரன்கள் எடுத்துப் போராடினார். இருப்பினும், அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியாக மாறியுள்ளது. போட்டியின் முடிவில் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மிகுந்த மனவேதனையுடன் டக்-அவுட்டில் தனியாக அமர்ந்திருந்தார். அவரது முகத்தில் தெரிந்த ஏமாற்றம் பஞ்சாப் அணியின் தற்போதைய நிலையை அப்பட்டமாகப் பிரதிபலித்தது. பல திட்டங்கள் தீட்டியும் அணி தொடர்ந்து தோற்பது அவரை நிலைகுலையச் செய்துள்ளது.
அதே சமயம், மைதானத்தில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் மிகவும் தீவிரமான உரையாடலில் ஈடுபட்டிருந்தார். அணியின் பந்துவீச்சு சொதப்பல் மற்றும் பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவுகள் குறித்து அவர்கள் நீண்ட நேரம் விவாதித்தனர். லீக் சுற்றின் முடிவில் மீண்டும் ஒரு முறை பஞ்சாப் அணி கோப்பையின்றி வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது பிரீத்தி ஜிந்தாவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.ஆனால், உரிமையாளர்கள் இதுபோல மைதானத்தில் வைத்து தோல்வி குறித்து விவாதிப்பது ஐபிஎல் தொடரில் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.
தொடர் தோல்விகள் குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "முடிவுகள் எப்படி இருந்தாலும் நான் எப்போதும் நேர்மறையாகவே இருப்பேன். இது எனது குணத்தை மாற்றிவிடாது. கடந்த காலத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. இன்றைய போட்டி முடிந்துவிட்டது. நாளை மீண்டும் புதிய சூரிய உதயம் இருக்கும், இருண்ட சுரங்கத்தின் முடிவில் நிச்சயம் ஒளி இருக்கும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். லக்னோ அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் வென்று, மற்ற அணிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க பஞ்சாப் அணி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
