சண்டிகர்: பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஐபிஎல் 2026 ஏலம் முடிந்து அணிகள் தங்கள் வீரர்கள் பட்டியலை வைத்து திட்டங்களை தீட்டத் துவங்கி விட்டன. ஆனால், அதற்கு முன் நடந்த சம்பவம் ஒன்று இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தை கடைசி 45 நிமிடத்தில் பதற வைத்த சம்பவத்தை நெஸ் வாடியா உடைத்துள்ளார்.
கடந்த 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடியவர் ஜோஷ் இங்கிலிஸ். 11 போட்டிகளில் 278 ரன்கள் விளாசிய அவரை, இந்த முறையும் தக்கவைக்க பஞ்சாப் அணி முடிவு செய்திருந்தது. எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.

தக்கவைக்கப்படும் வீரர்கள் பட்டியல் சமர்ப்பிக்க இன்னும் 45 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், ஜோஷ் இங்கிலிஸ் பஞ்சாப் நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளார். "எனக்கு கல்யாணம் நடக்கப்போகிறது.. அதனால் எனக்கு ஓய்வு தேவை.. என்னால் 2026 ஐபிஎல் தொடரின் போது முழு சீசனும் விளையாட முடியாது. வெறும் 3 போட்டிகள் அல்லது இரண்டு வாரங்கள் மட்டுமே வருவேன்" என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பஞ்சாப் நிர்வாகம் வேறு வழியில்லாமல் அவரை அணியிலிருந்து விடுவித்தது. இதுகுறித்து பேசியுள்ள நெஸ் வாடியா, "நாங்கள் அவரை விடுவிக்க விரும்பவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் இப்படி சொன்னால் என்ன செய்வது? இது மிகவும் தவறான செயல். நாங்கள் அவரை தக்க வைக்கப் போகிறோம் என்று அவருக்கு முன்பே தெரியும்.
அப்படி இருக்கையில், பட்டியலை அனுப்பும் இறுதிக் கெடு முடிவதற்கு 45 நிமிடம் முன்பு அழைத்து, 'நான் வரமாட்டேன்' என்று சொல்வது ஒரு தொழில்முறை வீரருக்கு அழகல்ல. முன்கூட்டியே சொல்லியிருந்தால் நாங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்திருப்போம். அவர் சிறந்த வீரர் தான், அவருக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் அவர் நடந்து கொண்ட விதம் சரியில்லை" என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், "என்னால் முழுமையாக ஆட முடியாது" என்று பஞ்சாப் அணியிடம் சொன்ன அதே ஜோஷ் இங்கிலிஸை, ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.8.60 கோடி கொடுத்து வாங்கியுள்ளது பஞ்சாப் அணியில் கழற்றிவிடப்பட்டாலும், லக்னோ அணியில் அவர் முழுமையாக ஆடுவாரா அல்லது அங்கும் கல்யாணக் காரணத்தைச் சொல்லி டிமிக்கி கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த சீசனில் மும்பைக்கு எதிரான முக்கிய போட்டியில் 73 ரன்கள் விளாசி பஞ்சாப்பை வெற்றி பெற வைத்தவர் ஜோஷ் இங்கிலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், "மாப்பிள்ளை" ஜோஷ் இங்கிலிஸ் செய்த காரியத்தால் பஞ்சாப் அணி செம கடுப்பில் உள்ளது; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியோ இங்கிலிஸ் ஆடுவாரா? இல்லையா? என்ற குழப்பத்தில் உள்ளது.