IPL 2026: டாஸ் சர்ச்சை.. குஜராத் வென்ற டாஸ் ராஜஸ்தானுக்கு மாறியது..ரெப்ரீ செயலால் கொந்தளிப்பு
சண்டிகர்: குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான 2026 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மைதானத்தில் டாஸ் நிகழ்வில் சர்ச்சை அரங்கேறியது. இறுதிப்போட்டிக்குச் செல்லும் அணியைத் தீர்மானிக்கும் இந்த முக்கியமான போட்டியில், டாஸ் போடும் நிகழ்வின் போது ஏற்பட்ட குளறுபடி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
மைதானத்தில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் மற்றும் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முன்னிலையில் டாஸ் போடப்பட்டது. அப்போது காசு சுண்டிவிடப்பட்ட போது, ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் 'ஹெட்ஸ்' (Heads) என சத்தமாகக் கூறினார். ஆனால் காசு கீழே விழுந்த போது அது 'டெய்ல்ஸ்' (Tails) என வந்தது. விதிமுறைப்படி குஜராத் கேப்டன் சுப்மன் கில் தான் டாஸ் வென்றிருக்க வேண்டும்.
ஆனால், அங்கிருந்த போட்டி நடுவர் பிரகாஷ் பட் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ரியான் பராக் என்ன அழைப்பு விடுத்தார் என்பது தனது காதுகளில் சரியாக விழவில்லை என்றும், அதனால் மீண்டும் ஒருமுறை டாஸ் போட வேண்டும் என்றும் அவர் கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மீண்டும் ஒருமுறை டாஸ் போடப்பட்டது. முதல் முறை டாஸில் தோற்ற ரியான் பராக், இரண்டாவது முறை போடப்பட்ட டாஸில் வெற்றி பெற்றார். அவர் உடனே பேட்டிங்கைத் தேர்வு செய்வதாக அறிவித்தார். ஒருமுறை டாஸ் போட்டு முடிவு தெரிந்த பிறகு, நடுவர் அதைக் கேட்கவில்லை என்று கூறி மீண்டும் டாஸ் போடச் சொன்னது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இதுகுறித்து அப்போதே குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் தனது கருத்தை பதிவு செய்தார். கில் கூறுகையில், "நாங்களும் பேட்டிங் தான் தேர்வு செய்து இருப்போம். இந்த மைதானம் முன்பு போலவே இருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரெப்ரீக்கு ரியான் சொன்னது கேட்கவில்லை." என சுட்டிக் காட்டினார்.
ரசிகர்கள் கொந்தளிப்பு
"குஜராத் வென்றிருக்க வேண்டிய டாஸ், நடுவரின் செயலால் ராஜஸ்தான் கைக்கு மாறியுள்ளது" என குஜராத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். இது ராஜஸ்தான் அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும், நடுவரின் இத்தகைய செயல் போட்டியின் நேர்மையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே இந்த சீசனில் நடுவர்களின் பல்வேறு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குவாலிபையர் 2 போன்ற ஒரு வாழ்வா-சாவா போட்டியில் டாஸ் நிகழ்விலேயே இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை குஜராத் அணி டாஸ் வென்றிருந்தால் அவர்கள் பேட்டிங் செய்திருப்பார்கள், ஆனால் இப்போது ஆட்டம் ராஜஸ்தான் வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தால் ரெப்ரீ மீது கடும் விமர்சனம் எழும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications
