IPL 2026: வைபவ் சூர்யவன்ஷி குருட்டுத்தனமாக ஆடல.. பல வெற்றிக்கு அடிப்படையாக இந்த சீசன் இருக்கு.. ரியான் பராக்
ஐபிஎல் 2026 தொடரின் Qualifier 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான 96 ரன்கள் பங்களிப்போடு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
215 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதன் தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி 167 ரன்கள் சேர்த்து அசாத்தியமான தொடக்கத்தை அளித்தனர். கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதம் விளாச, சாய் சுதர்சன் அவருக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.

இறுதியில் ராகுல் திவேதியா மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி நிதானமாக விளையாடி, 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி குஜராத் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றனர்.இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், "215 ரன்கள் என்பது தற்காத்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல ஸ்கோர் தான். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ஹெவி ரோலர் பயன்படுத்தப்பட்ட பிறகு பிட்ச் பேட்டிங் செய்ய சற்று சாதகமாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு நல்ல கிரிப் கிடைத்தது.
மேலும் ஸ்லோயர் பந்துகள் பிட்ச்சில் சற்று நின்று வந்தன. எனவே இது ஒரு சவாலான ஸ்கோர் என்றாலும், எங்களால் இன்னும் சிறப்பாக ரன் குவித்திருக்க முடியும். ஒரு கட்டத்தில் நாங்கள் 230 ரன்களை எட்டுவோம் போல் தெரிந்தது. இதுபோன்ற பெரிய போட்டிகளில் அந்த கூடுதல் 15-20 ரன்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
230-240 ரன்கள் எடுத்திருந்தால் இந்த சேஸிங் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்.இருப்பினும் 215 ரன்கள் என்ற இலக்கோடு களம் இறங்கும் போது, குஜராத் அணியின் பலமான பேட்டிங் வரிசையை வீழ்த்த அவர்களின் தொடக்க வீரர்களை நாங்கள் ஆரம்பத்திலேயே அவுட் ஆக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.
ஆனால் எங்களால் அதைச் செய்ய முடியாமல் போனது. அதன் பிறகு போட்டி எங்களுக்கு கடினமான பாதையாக மாறிவிட்டது. பல நேர்மறையான விஷயங்களுடன் இந்த சீசன் எங்களுக்கு மிகவும் நன்றாகவே அமைந்திருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்றே யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
எங்களிடம் பல இளம் வீரர்கள் இருந்தனர், ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் குறைவு. பல புதிய மாற்றங்களையும், காம்பினேஷன்களையும் இந்த சீசனில் முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் இந்த சூழ்நிலையிலும் எங்கள் வீரர்கள் காட்டிய குணமும், நாங்கள் இன்று வந்துள்ள இடமும், ஒரு நீண்ட நெடிய பயணத்திற்கான மிகச்சிறந்த தொடக்கமாக நான் பார்க்கிறேன்."
வைபவ் சூர்யவன்ஷி அவனுடைய ஆட்டத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏதோ களமிறங்கி கண்மூடித்தனமாக பேட்டை சுழற்றி ரன் அடிப்பது ஒரு வகை. ஆனால் சூர்யவன்ஷி ஆடிய விதம் அப்படிப்பட்டது அல்ல. அது குருட்டுத்தனமான ஸ்லாக்கிங் கிடையாது. முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தால், இன்று அவன் ஆடியது போன்ற ஒரு இன்னிங்ஸை ஆடவே முடியாது.
அவன் மிகச் சரியாக கணக்கு போட்டு, பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை கணித்து விளையாடுகிறான். சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்கிறான். அவனால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஆட முடிகிறது என்று எனக்கே இன்னும் புரியவில்லை. அவன் தொடர்ந்து இதேபோல் விளையாட வேண்டும் என்று நம்புகிறேன். விரைவில் நம் நாட்டின் சார்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி, எங்களின் இரண்டாவது கோப்பையை வென்று தர வேண்டும் என்பதே என் ஆசை."


Click it and Unblock the Notifications


