IPL 2026: சுப்மன் கில் கேப்டன்ஷியில் இவ்வளவு தவறா? குவாலிபையரில் இப்படி செயயலாமா- அஸ்வின் சாடல்
தர்மசாலா: ஆர்சிபி அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணித் தலைவர் ஷுப்மன் கில் தந்திரோபாய தவறுகள் செய்ததாகக் கருத்து தெரிவித்துள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் RCB 254/5 ரன்கள் குவித்து, 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின், பவர் பிளே முடிந்ததுமே, அதாவது ஏழாவது ஓவரிலேயே லெக் ஸ்பின்னர் ரஷீத் கானை பந்துவீச அழைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது ரஷீத் தனது எட்டாவது ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தாலும், மீதமுள்ள இரண்டு ஓவரில் 24 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.

கில்லின் வியூகம் குறித்து தனது சமீபத்திய யூடியூப் வீடியோவில் அஸ்வின், "ரஷீத் கான் இந்த ஐபிஎல் 2026 சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாகவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இது சிறப்பான சீசன் அல்ல, ஆனால் ரஷீத்துக்கு இது சில மற்ற ஸ்பின்னர்களைக் காட்டிலும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஏழாவது ஓவரில் ரஷீத்தை களமிறக்காதது ஷுப்மன் செய்த தவறு என்று நான் நினைக்கிறேன்," எனக் குறிப்பிட்டார்.
"ஷுப்மன் கில் இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவர், ஒருவேளை மிகச் சிறந்தவராகவும் இருக்கலாம். மேலும், அவர் தனது பேட்டிங்கில் கொண்டுவந்த மாற்றங்களுக்காக நான் என் தொப்பியை கழற்றுகிறேன். ஆனால், அவர்களின் அணியில் சில பலவீனங்களும், குறைபாடுகளும் உள்ளன. அவர்கள் தங்கள் சொந்த மண்ணின் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி அதைச் சரிசெய்துள்ளனர்," என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டினார்.
குவாலிஃபையர் 1-ல் கில் 7 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.குஜராத் அணியின் பிளேயிங் லெவன் பற்றிய தனது கருத்திலும் அஸ்வின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டியில் குல்வந்த் கெஜ்ரோலியாவை அணியில் சேர்த்திருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். சீசனின் தனது முதல் ஆட்டத்தில் களமிறங்கிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் கெஜ்ரோலியா, இரண்டு ஓவரில் 31 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் ஏதும் எடுக்கவில்லை.
15வது ஓவரில் கெஜ்ரோலியா 28 ரன்களை வாரி வழங்கிய பின்னர், போட்டியின் உத்வேகம் முழுமையாக RCB-க்கு சாதகமாக மாறியதை அஸ்வின் வலியுறுத்தினார். அதே வீடியோவில், "நடுநிலையான மைதானத்தில் RCB., GT-யின் திறனை வெளிப்படுத்தியது. டாஸ் வெல்வது முக்கியம், அவர்கள் முதலில் பந்துவீசத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இன்று ஏன் குல்வந்த் கெஜ்ரோலியாவை ஆட வைத்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை," என அஸ்வின் சுட்டிக்காட்டினார்.
"யாரையாவது ஆட வைக்க விரும்பினால், அதில் ஒரு மர்மம் இருக்க வேண்டும். அவர் ஒரு மர்மமான பந்துவீச்சாளர் இல்லை. அவர் ஏற்கனவே சில போட்டிகளில் விளையாடியுள்ளார். 15வது ஓவரில் 28 ரன்கள் எடுக்கப்பட்டன, அது போட்டியின் போக்கை முழுமையாக மாற்றியது," என்றார் அஸ்வின்.
குஜராத் அணி இப்போது குவாலிஃபையர் 2 போட்டிக்காக முல்லன்பூருக்குச் செல்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் வெற்றியாளருடன் இந்தப் நாக்-அவுட் போட்டி மே 29, வெள்ளிக்கிழமை அன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இதே போன்று சிஎஸ்கே எதிரான போட்டியை வென்று சுப்மன் கில், சிஎஸ்கே ரசிகர்களை வம்பிழுக்கும் செயலில் ஈடுபட்ட நிலையில், தற்போது, ஆர்சிபியிடம் தக்க பதிலடியை பெற்று, அவருடைய அகம்பாவம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications

