Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ராஜஸ்தான் அணியில் ஜடேஜாவுக்கு அவமானம்.. எகிறிய அஸ்வின்.. ரியான் பராக் மீது விமர்சனம்

ஜெய்ப்பூர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 2026 ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ரியான் பராக்கின் ஒரு விசித்திரமான முடிவை இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். "உலகத்தரம் வாய்ந்த ஜடேஜாவை இப்படி நடத்துவதா?" என அஸ்வின் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா அணி. ரிங்கு சிங் 53 ரன்களும், அனுகுல் ராய் 29 ரன்களும் எடுத்து கொல்கத்தாவின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆனால், ராஜஸ்தான் அணி கையில் இருந்த வெற்றியை நழுவவிட்டது குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

IPL 2026 Ravichandran Ashwin Criticizes as Ravindra Jadeja sidelined by Riyan Parag in RR Loss to KKR

ஜடேஜாவுக்கு நேர்ந்த அவமானம்

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். அவர் வீசிய 3 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆட்டம் நெருக்கடியான கட்டத்தை எட்டியபோது, ஜடேஜாவிற்கு இன்னும் 1 ஓவர் மீதமிருந்தது. ஆனால், கேப்டன் ரியான் பராக் அவருக்குப் பந்துவீச வாய்ப்பு அளிக்காமல் தவிர்த்தார். இதற்குப் பின்னால் இருந்த காரணம் தான் அஸ்வினை கோபப்படுத்தியுள்ளது.

அஸ்வின் காட்டம்

இது குறித்து பேசிய அஸ்வின், "உங்களிடம் உலகத்தரம் வாய்ந்த ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் இருக்கிறார். புள்ளிவிவரங்கள் சில விஷயங்களைச் சொல்லலாம், ஆனால் 3 ஓவர்களில் 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்த ஒருவரை ஏன் பயன்படுத்தவில்லை? கொல்கத்தாவில் ரிங்கு சிங், அனுகுல் ராய் என இரண்டு இடது கை பேட்டர்கள் இருந்ததால், இடது கை ஸ்பின்னரான ஜடேஜாவால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என ரியான் பராக் நினைத்துவிட்டார். தான் ஒரு ஆஃப் ஸ்பின்னர் என்பதால் தானே அவர்களைச் சமாளிக்கலாம் என அவர் நினைத்த அந்த மனோபாவம் தான் தவறு. இது பந்துவீச்சு பிரிவின் மீதான நம்பிக்கையை நீண்ட கால அடிப்படையில் பாதிக்கும்" என்றார்.

தவறான கணக்கு

மேலும் அவர் கூறுகையில், "ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன் போன்ற அதிரடி பேட்டர்களை அவர்கள் இடது கை வீரர்கள் என்பதற்காக நீங்கள் பேட்டிங் செய்ய அனுப்பாமல் இருப்பீர்களா? அது நடக்காது. அதேபோல் தான் பந்துவீச்சிலும் திறமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனுபவமே இல்லாத பிரஜேஷ் சர்மா போன்ற வீரர்களுக்கு 18 மற்றும் 20-வது ஓவர்களைக் கொடுக்கும் போது, ஃபார்மில் இருக்கும் ஜடேஜாவிற்கு ஏன் கொடுக்கவில்லை?

ஜடேஜா அந்த விக்கெட்டை எடுத்திருந்தால் அவரே ஆட்டநாயகனாக இருந்திருப்பார். ராஜஸ்தான் அணி வலுவான அணியாக மாறியிருக்கும். தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, சிறந்த பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தித் தோற்பது தான் ஒரு கேப்டனுக்கு அழகு" என அஸ்வின் விளாசியுள்ளார்.

தொடர்ந்து 4 வெற்றிகளைப் பெற்றிருந்த ராஜஸ்தான் அணிக்கு, ஜடேஜாவை ஓரங்கட்டிய இந்த முடிவு ஒரு கசப்பான அனுபவமாக மாறியுள்ளது. கேப்டன் ரியான் பராக் தரவுகளுக்கு (Data) முக்கியத்துவம் கொடுத்து அனுபவத்தை மறந்தது தான் தோல்விக்குக் காரணம் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். வரும் போட்டிகளிலாவது ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களை ராஜஸ்தான் சரியாகப் பயன்படுத்துமா?.

Story first published: Monday, April 20, 2026, 13:29 [IST]
Other articles published on Apr 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+