சென்னை: முன்னாள் ஐபிஎல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு உள்ளூர் போட்டிகளுக்கான மைதானங்களாக இரண்டு நகரங்கள் உள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த சீசனில் தங்களது முதல் 3 உள்ளூர் போட்டிகளை அசாம் மாநிலம் கவுகாத்தியிலும், மீதமுள்ள 4 உள்ளூர் போட்டிகளை ஜெய்ப்பூரிலும் விளையாட உள்ளது.
ரியான் பராக் தலைமையிலான அந்த அணி குறித்து பேசிய அஸ்வின், "ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோர் அணிக்கு வந்திருப்பது ராஜஸ்தான் அணியின் கட்டமைப்பை முந்தைய சீசனை விட மிகவும் வலுவாக்கியுள்ளது. அந்த அணிக்கு பல விஷயங்கள் சாதகமாக இருந்தாலும், சில பாதகமான விஷயங்களும் உள்ளன. அவர்கள் தங்களது உள்ளூர் போட்டிகளை ஒரே மைதானத்தில் விளையாடாதது அறவே நியாயமில்லை" என்று தெரிவித்தார்.

"ரியான் பராக் அணியின் கேப்டனாக இருப்பதால் அசாமில் அவருக்கு சிறப்பான உள்ளூர் ஆதரவு கிடைக்கும் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், நீங்கள் விளையாட விரும்பினால் சீசன் முழுவதையும் அங்கேயே விளையாடுங்கள். நான் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட போது, சில உள்ளூர் போட்டிகளை நாங்கள் இந்தூரில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டிக்கெட் விற்பனை மற்றும் ரசிகர்களின் ஆதரவு என பல நிர்வாக காரணங்கள் இருந்தாலும், வீரர்களின் ஆட்டத்திறனில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அஸ்வின் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியும் தங்களது உள்ளூர் போட்டிகளை பிரித்து இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் சில போட்டிகளை விளையாடி வருகிறது. கடந்த சீசனில் ஜம்மு பகுதியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான பஞ்சாப் அணியின் போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் மார்ச் 30 அன்று கவுகாத்தியில் எதிர்கொள்ள உள்ளது.
