IPL 2026: மானத்தை காப்பாற்றிய ஜடேஜா.. தட்டித் தட்டி 159 ரன் எடுத்த ராஜஸ்தான்.. லக்னோ அபார பவுலிங்
லக்னோ: ஒரு விக்கெட் கூட இழக்காமல் 32 ரன்கள் எடுத்திருந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 10 பந்துகளுக்குள் அதே 32 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளைப் பறிகொடுத்துப் பரிதாபமாக நின்றது. மைதானமே லக்னோ பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் அதிர்ந்த நிலையில், அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா நங்கூரமாய் நின்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மானத்தைக் காப்பாற்றினார். தட்டுத் தடுமாறி ராஜஸ்தான் அணி 159 ரன்களை எட்டியது.
லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த 32வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடியாகத் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த போது, முகமது ஷமி வீசிய பந்தில் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்திலேயே துருவ் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இவர்களைத் தொடர்ந்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 500 ரன்களைக் கடந்து சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷியும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 3.6 ஓவர்களில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.
நடுவரிசையில் களம் புகுந்த கேப்டன் ரியான் பராக் 20 ரன்களும், ஷிம்ரான் ஹெட்மயர் 22 ரன்களும் எடுத்து அணியை மீட்கப் போராடினர். இருப்பினும் லக்னோவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி 120 ரன்களைக் கூடத் தாண்டாது என்ற சூழல் நிலவியது.
அப்போது களம் புகுந்த ரவீந்திர ஜடேஜா, நிதானமாகவும் அதே சமயம் தேவைப்படும்போது அதிரடியாகவும் விளையாடினார். அவர் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்குப் பக்கபலமாக இருந்த சுபம் துபே கடைசி நேரத்தில் 11 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
லக்னோ அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை மோஷின் கான் அபாரமாகச் செயல்பட்டார். அவர் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது ஷமி மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் பேட்டிங் வரிசையை வீழ்த்தினர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரும்பிய மயங்க் யாதவ் மட்டும் 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினார்.


Click it and Unblock the Notifications