ஆர்சிபி அணிக்கு விழுந்த அடி.. கேப்டன் ரஜத் படிதாருக்கு நேர்ந்த கதி.. 2026 ஐபிஎல் ஆட வாய்ப்பு குறைவு
பெங்களூர்: 2026 ஐபிஎல் சீசனுக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரஜத் படிதார், தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட தசைநார் கிழிவு (Muscle Tear) காயம் காரணமாக நீண்ட காலம் கிரிக்கெட்டிலிருந்து விலக நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காயம், 2026 ஐபிஎல் சீசனில் அவர் பங்கேற்பதையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியின் போது தசைநார் கிழிவு ஏற்பட்டதால், ரஜத் படிதார் சுமார் நான்கு மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, சமீப காலமாக அவர் வெளிப்படுத்தி வந்த சிறப்பான ஃபார்ம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் காயத்தால், 2025-26 ரஞ்சி கோப்பை தொடர் மற்றும் பிற உள்நாட்டுப் போட்டிகளிலும் அவர் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது, இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பும் அவரது முயற்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனினும், இந்தக் காயம் குறித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இன்றிலிருந்து நான்கு மாதங்கள் கணக்கிட்டால், அவர் பிப்ரவரி மாதம் மத்தியில்தான் மீண்டும் விளையாடத் தயாராவார். ஐபிஎல் தொடர் பொதுவாக மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும். அவரது காயம் குணமடைவது மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகள் திட்டமிட்டபடி நடந்தால், 2026 ஐபிஎல் தொடரில் ரஜத் படிதார் பங்கேற்க வாய்ப்புள்ளது.
32 வயதான ரஜத் படிதார், இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பும் முனைப்பில் அபாரமான ஃபார்மில் இருந்தார். சமீபத்தில், மத்தியப் பிரதேச அணிக்காகப் பஞ்சாப் அணிக்கு எதிராகத் தனது முதல் ரஞ்சி கோப்பை இரட்டைச் சதத்தை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2024-25 சீசனில், அவர் ஏழு போட்டிகளில் 529 ரன்களை 77 என்ற சராசரியுடன் குவித்து, மீண்டும் இந்திய அணி தேர்வாளர்களின் கதவைத் தட்டினார்.
கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு முதல்முறையாகக் கோப்பையை வென்று தந்தது, பின்னர் துலீப் டிராபியில் அதிக ரன்கள் குவித்தது என அவரது கிரிக்கெட் பயணம் உச்சத்தில் இருந்தது. இந்தச் சூழலில் ஏற்பட்டுள்ள காயம், அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு தற்காலிகத் தடையை ஏற்படுத்தியுள்ளது. இது மத்தியப் பிரதேச அணிக்கும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications