ஐபிஎல் கோப்பையை வெல்வேன் என கனவிலும் நினைத்ததில்லை.. எல்லாமே விதி- ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து தனது இரண்டாவது பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கேப்டன் ரஜத் படிதார், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் மற்றும் அணியின் பந்துவீச்சாளர்களை பெரிதும் பாராட்டினார்.
இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வென்றது ரஜத் படிதாரை உணர்ச்சிவசப்பட வைத்தது. போட்டிக்குப் பின் பேசிய அவர், அணியின் பந்துவீச்சாளர்கள், தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலியைப் பாராட்டினார்.

இந்த மகத்தான வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரஜத் பட்டிதார் , "இது அற்புதம். நாங்கள் இங்கு வந்தபோது கடந்த ஆண்டு நினைவுகள் நிறைய இருந்தன, கடந்த ஆண்டு நாங்கள் ஆடிய விதமும் நினைவுக்கு வந்தது. ஆனால், அதே நேரத்தில், நாங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் என்று உணர்ந்தோம். இதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை, ஆனால் நான் நன்றாக உணர்கிறேன்," என்று தெரிவித்தார்.
"உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், நான் RCB-க்கு கேப்டனாக கோப்பையை வெல்வேன் என்று ஒருபோதும் கனவு கண்டதில்லை. இது அனைத்தும் விதிப்படி நடந்ததாக நான் நினைக்கிறேன், அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த ஆண்டு முதல் முறை கோப்பையை வென்றதால் நிறைய அழுத்தம் இருந்தது."
"இந்த ஆண்டு, தொடரில் நாங்கள் ஆடிய விதத்தைப் பொறுத்தவரை மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இம்முறை சற்று அதிக நம்பிக்கையுடன் இருந்தது நல்லது,நாங்கள் சென்ற ஒவ்வொரு மைதானத்திலும் ரசிகர்கள் வந்து ஆதரவு அளித்தது மகிழ்ச்சி அளித்தது. அது எங்களுக்கு உள்ளூர் மைதானம் போலவே இருந்தது. ஒட்டுமொத்தமாக RCB-க்கு இது சிறப்பானதாக அமைந்தது," என்று நெகிழ்ந்தார்.
பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குறித்து பேசிய ரஜத், "இந்தத் தொடரில், தினேஷ் கார்த்திக், விராட் கோலி பாய் உட்பட பல வீரர்களுடன் பணியாற்றினேன். அவர்களிடமிருந்து பல உள்ளீடுகளையும், யோசனைகளையும் பெற்றேன். அவை எனக்கு உதவின. கோலியை நான் களத்திலும் வெளியிலும் பார்க்கும்போதெல்லாம், அவர் எப்போதும் அணிக்காகவும் வீரர்களுக்காகவும் இருக்கிறார்."
"குறிப்பாக புதிய வீரர்கள் பேசத் தயங்கும் போது, அவரே நேராகச் சென்று பேசுவார். இது மிகவும் அற்புதம். எனவே, RCB ரசிகர்களே, இந்த வெற்றி மீண்டும் உங்களுக்கானது. 'ஈ சலானு கப் நம்மது’," எனக் கூறி பட்டிதார் தனது உரையை நிறைவு செய்தார்.இந்த வெற்றியின் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்ற மூன்றாவது அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications

