IPL 2026: சிஎஸ்கே ஆர்சிபியிடம் படுதோல்வியை தழுவ கூடாது என பிரார்த்தனை செய்யுங்க.. பத்ரிநாத் கிண்டல்
பெங்களூரு: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையிலான மோதல் இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் CSK அணி படுதோல்வியைத் தவிர்த்தால் அதுவே அதிர்ஷ்டம் என இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் சுப்ரமணியம் பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார். RCB முதல் போட்டியை வென்ற நிலையில், CSK இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு RCB முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. அதேசமயம், CSK தங்கள் வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. சிஎஸ்கேக்கு எதிரான கடைசி மூன்று லீக் போட்டிகளிலும் RCB தான் வெற்றி பெற்றுள்ளது. இக்காரணங்களால், வரவிருக்கும் மோதலில் RCB உறுதியான வெற்றியை பெறும் அணியாகத் திகழ்கிறது.

தனது யூடியூப் சேனலில் இந்த மோதல் குறித்து பேசிய பத்ரிநாத், “CSK கடந்த ஆண்டு கடைசி இடத்தைப் பிடித்தது, இந்த சீசனிலும் ஏற்கனவே கடைசி இடத்தில் தான் இருக்கிறது. இத்தனை சீசன்களிலும் நான் இப்படிச் சொன்னதில்லை, ஆனால் இப்போ சொல்வேன். RCB சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெரும். உண்மையில், CSK-க்கு எதிராக RCB தான் விருப்பமான அணி. CSK சிறப்பாக செயல்பட்டால் நான் ஆச்சரியப்படுவேன்.
RCB ஒரு வேறு மட்டத்தில் இருப்பதால் CSK படுதோல்வியை தவிர்க்க பிரார்த்தனை செய்ய வேண்டும். அவர்கள் ஒரு சீராக இயங்கும் இயந்திரம். ஹேசில்வுட் இல்லாமல்கூட, அவர்கள் ஒபலமான அணியாகத் தெரிகிறார்கள்.” என தெரிவித்தார். இருப்பினும், சமீபத்திய முடிவுகள் ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் CSK அணி RCB-ஐ விட 21-13 என்ற ஆரோக்கியமான முன்னிலையை தக்கவைத்துள்ளது.
தற்போதைய சூழலில், காயமடைந்த டெவால்ட் பிரெவிஸ் அணிக்கு திரும்பினால் மட்டுமே சின்னசாமி மைதானத்தில் வலிமையான RCB-ஐ சமாளிக்க CSK-க்கு ஒரு வாய்ப்பு உருவாகும் என பத்ரிநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,“RCB-க்கு எதிராக CSK-வின் ஒரே நம்பிக்கை டெவால்ட் பிரெவிஸ் மீண்டும் உடற்தகுதியுடன் வந்தால் மட்டுமே. அது இப்போது ஒரு பெரிய வெற்றிடமாகத் தெரிகிறது.
பிரெவிஸ் உடற்தகுதியுடன் விளையாடினால், RCB-க்கு எதிராக CSK-க்கு அதுவே ஒரே வாய்ப்பாக இருக்கும். CSK கோப்பையை வெல்லத் தேவையில்லை, ஆனால் குறைந்தபட்சம் போட்டியிடவாவது வேண்டும். சரியான கிரிக்கெட் முறைப்படி CSK வெல்ல முடியாது, எனவே ஒரு சில அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அவர்கள் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்” என்று பத்ரிநாத் கூறினார்.
கடந்த சீசனில் CSK அணிக்காக அறிமுகமான பிரெவிஸ் சிறப்பாக செயல்பட்டார். ஆறு போட்டிகளில் அவர் 37.50 சராசரி மற்றும் 180 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அபாரமாகப் பங்களித்தார். அவரது வருகை இந்த சவாலான போட்டிக்கு பெரும் திருப்புமுனையாக அமையலாம்.


Click it and Unblock the Notifications