IPL 2026: சன்ரைசர்ஸ் டாப் ஆர்டரை காலி செய்த ஆர்சிபியின் ஜேக்கப் டஃபி.. பவர்பிளேவில் தடுமாற்றம்
பெங்களூரு: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கி உள்ள ஆர்சிபி அணி அபாரமான தொடக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. 19-வது சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர் சி பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியில் ஹேசல்வுட் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃபி களம் இறங்கினார்.

டி20 கிரிக்கெட்டில் அதி பயங்கர பேட்ஸ்மேனாக கருதப்படும் அபிஷேக் ஷர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இந்த ஜோடி பவர்பிளேவில் சிறப்பாக விளையாடி அதிரடி தொடக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு தகுந்தார் போல் முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா சிக்ஸர் அடித்தார்.
ஆனால் ஜேக்கப் டஃபி தனது உயரத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு பந்தை வீசினார். அதாவது சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவர்களது உடலை தாக்கும் வகையில் பந்தை ஜேக்கப் டஃபி வீசினார். இதனால் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா தடுமாறினார்கள்.
இருவரும் அந்த பந்துகளை அடிக்க முற்பட்டபோது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அபிஷேக் ஷர்மா ஏழு ரன்களில் ஜித்தேஷ் சர்மாவிடம் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இரண்டு பவுண்டரிகளுடன் ஆட்டம் இழந்தார். இந்த சூழலில் நான்காவது வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும், ஜேக்கப் டூபே பந்தில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இந்த மூன்று விக்கெட்டுகளையும் ஜேக்கப் டஃபி தான் வீழ்த்தினார். பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீசிய அவர் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் அதிகபட்ச ரன்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்சிபி அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications