IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத 2 மெகா சாதனைகளை செய்த கோலி
தரம்சாலா: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை ஒரே நாளில் படைத்து உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை மீண்டும் ஒருமுறை பதித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுநாள் வரை எந்தவொரு ஜாம்பவானும் எட்டாத இரண்டு மைல்கற்களை கோலி எட்டிப் பிடித்துள்ளார்.
தொடர்ந்து 4 சீசன்களில் 600 ரன்கள்:
குஜராத் அணிக்கு எதிராக 43 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 4 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை கோலி படைத்தார். இந்தப் போட்டியில் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

கடந்த 2023-ல் 639 ரன்கள், 2024-ல் 741 ரன்கள், 2025-ல் 657 ரன்கள் என அதிரடி காட்டிய கோலி, இந்த 2026 சீசனிலும் 600 ரன்களைக் கடந்துள்ளார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடர்ந்து 3 சீசன்களில் 600 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது கோலி அதனை முறியடித்துள்ளார்.
8 அணிகளுக்கு எதிராக 500 ரன்கள்:
மற்றொரு சாதனையாக, ஐபிஎல் தொடரில் 8 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தலா 500 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக ஏற்கனவே 500 ரன்களைக் கடந்திருந்த கோலி, தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தலா 7 அணிகளுக்கு எதிராக 500 ரன்களைக் கடந்துள்ளனர். தரம்சாலாவின் குளிர்ச்சியான சூழலில் கோலி விளாசிய இந்த அதிரடி ஆட்டம், பெங்களூரு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. வயதானாலும் ஃபார்ம் குறையாமல் 'கிங்' கோலி படைத்து வரும் இந்த சாதனைகள், 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் அவர் நிச்சயம் இடம் பெறுவார் என்பதை உணர்த்தும் வகையிலும் இருந்தது.


Click it and Unblock the Notifications
