IPL 2026: 33 பந்தில் 93 ரன்கள் குவித்த கேப்டன் ரஜத்.. ஆர்சிபி மெகா ஸ்கோர்.. மிரண்ட குஜராத்
தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 254 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளது. தரம்சாலாவில் உள்ள இமயமலை பின்னணியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் ஆடிய அதிரடி ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

பெங்களூரு அணியின் இன்னிங்ஸை வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி ஜோடி அதிரடியாகத் தொடங்கியது. வெங்கடேஷ் ஐயர் 7 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கோலி 43 ரன்களும், தேவ்தத் படிக்கல் 30 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பவர்பிளே ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 76 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
படிதாரின் சிக்ஸர் மழை:
இதன்பின்னர் களம் புகுந்த கேப்டன் ரஜத் படிதார், தரம்சாலா மைதானத்தையே தனது சிக்ஸர்களால் அதிரவைத்தார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த அவர், வெறும் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 9 பிரம்மாண்ட சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இவரது ஸ்டிரைக் ரேட் 281.82 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்குத் துணையாக க்ருணால் பாண்டியா 43 ரன்கள் எடுத்து வெளியேற, கடைசி நேரத்தில் ஜித்தேஷ் சர்மா 5 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 250-க்கு மேல் கொண்டு சென்றார்.
திணறிய குஜராத் பந்துவீச்சு:
குஜராத் அணியின் பந்துவீச்சு இந்தப் போட்டியில் மிக மோசமாக அமைந்தது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் (46 ரன்கள்), ககிசோ ரபாடா (54 ரன்கள்) மற்றும் பிரசித் கிருஷ்ணா (53 ரன்கள்) ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 3 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து ஓரளவு கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.
குல்வந்த் கெஜ்ரோலியா வீசிய 2 ஓவர்களில் மட்டும் பெங்களூரு பேட்டர்கள் 31 ரன்களை விளாசினர். ரஜத் படிதாரின் இந்த 'கேப்டன் நாக்' பெங்களூரு அணியை இறுதிப்போட்டிக்கு மிக அருகில் கொண்டு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications
