IPL 2026: 'பூஜ்ஜியத்தில் கோலியை கோட்டை விட்டால் இதுதான் கதி..'.. தோல்வி குறித்து சுப்மன் கில் வேதனை
பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. விராட் கோலி போன்ற ஜாம்பவான் தந்த கேட்சை கோட்டை விட்டால் என்ன நடக்கும் என்பதை இந்த ஆட்டம் அப்பட்டமாக உணர்த்தியுள்ளது. ஆரம்பத்திலேயே தப்பித்த கோலி 81 ரன்களைக் குவித்து குஜராத் அணியின் வெற்றியைப் பறித்த சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, சாய் சுதர்சனின் அபார சதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. கில் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய சுதர்சன் 57 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 16 முதல் 19 ஓவர்கள் வரை பவுண்டரிகள் அடிக்காதது தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக சுப்மன் கில் போட்டிக்கு பின் கூறினார்.

206 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி தனது சொந்த மண்ணில் களமிறங்கியது. இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே விராட் கோலி 0 ரன்னில் இருந்த போது கொடுத்த மிக எளிமையான கேட்ச் வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் தவறவிட்டார். இதுவே ஆட்டத்தின் தலையெழுத்தை மாற்றியது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட கோலி, குஜராத் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து 81 ரன்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக தேவதூத் படிக்கல் 55 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் தனது முதல் போட்டியை ஆடிய பெத்தேல் 14 ரன்கள் எடுத்தார்.
ஆட்டத்தின் பிற்பாதியில் ரஷித் கான் மற்றும் மானவ் சுதார் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தாலும், டிம் டேவிட் 10 ரன்களுடனும், க்ருணால் பாண்டியா 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆர்சிபி அணி இன்னும் 7 பந்துகள் மீதமிருக்கையிலேயே 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பின் தோல்வி குறித்துப் பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், "ஒரு பேட்ஸ்மேன் 0 ரன்னில் இருக்கும் போது கேட்சை தவறவிடுவது பீல்டருக்கு மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால், அதிலிருந்து நாம் எப்படி மீண்டு வருகிறோம் என்பதே முக்கியம். நடு ஓவர்களில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக ஆடினர். பவர்பிளே ஓவர்களின் முடிவில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம், ஆனால் எங்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை," என வேதனை தெரிவித்தார். மேலும், சதம் விளாசிய சாய் சுதர்சன் குறித்துப் பேசிய கில், "கடந்த 2 போட்டிகளில் ஆட்டமிழந்த விதம் குறித்து சுதர்சன் வருத்தத்தில் இருந்தார். அடுத்த போட்டியிலாவது பவர்பிளேயில் எனக்கு அவர் அதிக ஸ்ட்ரைக் கொடுப்பார் என நம்புகிறேன்," என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications

