IPL 2026: தோனியின் 13 ஆண்டு ரெக்கார்டை உடைத்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாட்டியா
தரம்சாலா: தரம்சாலாவில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாட்டியா, ஐபிஎல் நாக்-அவுட் சுற்றுகளில் 7-வது இடத்தில் களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தோனியின் 13 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் குஜராத் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தாலும், தெவாட்டியாவின் தனிநபர் சாதனை ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பெங்களூரு அணி நிர்ணயித்த 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது 7-வது வீரராக களம் புகுந்த ராகுல் தெவாட்டியா, பெங்களூரு பந்துவீச்சை துணிச்சலாக எதிர்கொண்டு 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இதற்கு முன்னதாக, கடந்த 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி 7-வது இடத்தில் களம் இறங்கி 63 ரன்கள் எடுத்ததே பிளே-ஆப் சுற்றுகளில் ஒரு 7-வது இட வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. சுமார் 13 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சாதனையைத் தெவாட்டியா தற்போது முறியடித்துள்ளார்.
பிளே-ஆப் சுற்றில் 7-வது இட வீரர்களின் அதிகபட்ச ரன்கள்:
ராகுல் தெவாட்டியா - 68 ரன்கள் (2026)
எம்.எஸ்.தோனி - 63 ரன்கள் (2013)
பிராட் ஹோட்ஜ் - 54 ரன்கள் (2013)
ஆண்ட்ரே ரசல் - 49 ரன்கள் (2018)
மற்றொரு சாதனை:
மேலும், இந்தப் போட்டியில் முகமது சிராஜ் உடன் இணைந்து 9-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த தெவாட்டியா, ஐபிஎல் வரலாற்றில் 9-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 2-வது சிறந்த பார்ட்னர்ஷிப் என்ற பெருமையையும் பெற்றுத் தந்துள்ளார்.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த குஜராத் அணி, எலிமினேட்டர் போட்டியில் (ஹைதராபாத் vs ராஜஸ்தான்) வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது குவாலிபையரில் மோத உள்ளது.


Click it and Unblock the Notifications
