"வெறும் ஸ்டைல் காட்ட ஒரு கேப்டன்".. ரியான் பராக்கை குறிவைத்த ஸ்ரீகாந்த்.. ஜடேஜா விஷயத்தில் காட்டம்
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும், அந்த அணியின் கேப்டன் ரியான் பராக்கின் தலைமைப் பண்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து முன்னாள் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "அவர் வெறும் ஸ்டைல் காட்ட மட்டுமே அணியில் இருக்கிறார்" என ஸ்ரீகாந்த் காட்டமாக பேசி இருக்கிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவிற்கு ஒரு ஓவர் கூட பந்துவீச ரியான் பராக் வாய்ப்பு வழங்கவில்லை. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. போட்டிக்குப் பிறகு இது குறித்துப் பேசிய ரியான் பராக், ஹைதராபாத் அணியில் இடது கை பேட்டர்கள் அதிகமாக இருந்ததால், இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவிற்கு ஓவர் கொடுக்கவில்லை என்று விளக்கமளித்தார்.

அபத்தமான விளக்கம்
ரியான் பராக்கின் இந்த விளக்கத்தை 1983 உலகக்கோப்பை நாயகன் ஸ்ரீகாந்த் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகையில், "ரியான் பராக் வெறும் ஸ்டைலுக்காக மட்டுமே அணியில் இருக்கிறார். பேட்டிங்கிலும் அவர் உருப்படியாக எதையும் செய்வதில்லை, ஆனால் போட்டி முடிந்ததும் வந்து பேசுகிறார். இடது கை பேட்டர் களத்தில் இருந்தால் இடது கை ஸ்பின்னர் பந்துவீசக் கூடாது என்று ஏதாவது கிரிக்கெட் விதி இருக்கிறதா? ஜடேஜா போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த வீரருக்கு ஓவர் கொடுக்காதது மிகவும் அபத்தமானது" என்று விளாசித் தள்ளியுள்ளார்.
பந்துவீச்சில் ஓட்டை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்தும் ஸ்ரீகாந்த் கவலை தெரிவித்துள்ளார். "துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரும் வீசிய 11 ஓவர்களில் மட்டும் 142 ரன்கள் வாரிக் கொடுக்கப்பட்டுள்ளன. சந்தீப் சர்மாவை ஹைதராபாத் வீரர்கள் அடித்து நொறுக்கினர். துஷார் தேஷ்பாண்டே சுத்தமாக சோபிக்கவில்லை. பந்துவீச்சு கூட்டணியில் ராஜஸ்தான் அணி உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் அடுத்தடுத்த போட்டிகளில் மற்ற அணிகளிடம் இருந்து பலமான அடி வாங்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்தில் இருந்தாலும், கேப்டன் ரியான் பராக்கின் சில முடிவுகள் மற்றும் பந்துவீச்சாளர்களின் சொதப்பல் ஆட்டம் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்தின் இந்த காட்டமான விமர்சனம் தற்போது ஐபிஎல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications