Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இ-சிகரெட் பிடித்த பராக்கிற்கு வெறும் அபராதமா? பிசிசிஐ முடிவால் ரசிகர்கள் கொதிப்பு

மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஓய்வறையில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட் பிடித்த ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக்கிற்கு வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பிரபலமான கிரிக்கெட் வீரருக்கு ஒரு சட்டமா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி என்ன நடந்தது, சட்ட விதிகள் என்ன சொல்கிறது, பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் 28ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் 24 வயது இளம் கேப்டனான ரியான் பராக், தனது அணியின் ஓய்வறையில் சக வீரர்களுடன் இருந்தபோது இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட் பயன்படுத்திய காட்சி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலானது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

IPL 2026 Riyan Parag Vaping Controversy Fans questions lesser punishment by BCCI

இந்த விவகாரம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தியது. இதில், ஐபிஎல் நடத்தை விதிமுறை 2.21ஐ மீறியதாக, அதாவது விளையாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ரியான் பராக்கிற்கு அவரது போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனை போட்டி நடுவர் அமித் சர்மா உறுதி செய்தார். ரியான் பராக்கும் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொண்டார்.

ஆனால், ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த மென்மையான நடவடிக்கை ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் 2019ம் ஆண்டு முதல் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. மேலும் இதனை சேமித்து வைத்தால் 6 மாத சிறை அல்லது 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அப்படி இருக்கையில், சாதாரண குடிமகனுக்கு ஒரு சட்டம், கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சட்டமா என ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். மைதானத்தில் விக்கெட்டை கொண்டாடுவது, ஓவர்களை மெதுவாக வீசுவது போன்ற சாதாரண விஷயங்களுக்கு கூட வீரர்களுக்கு பல போட்டிகளில் விளையாட தடை விதிக்கும் ஐபிஎல் நிர்வாகம், சட்டவிரோதமான ஒரு செயலுக்கு வெறும் அபராதம் மட்டும் விதிப்பது இரட்டை நிலைப்பாடு என கடுமையாக சாடி வருகின்றனர்.

ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து, ஐபிஎல் நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. ஐபிஎல் தொடரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான இந்த செயலுக்காக, சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் அணி நிர்வாகம், அதிகாரிகள் மற்றும் வீரர் மீது கடுமையான மாற்று நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மே 1ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரியான் பராக் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, May 1, 2026, 11:17 [IST]
Other articles published on May 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+