பெங்களூரு: "ஈ சாலா கப் நம்தே" என்று முழங்கியபடி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குவியும் ஆர்சிபி ரசிகர்களுக்கு சோகமான செய்தி வந்துள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, தங்கள் சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் விளையாட வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஜூன் 4, 2025 அன்று சின்னசாமி மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையிலான குழு நடத்திய விசாரணையில், சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான கூட்டத்தைக் கையாள "பாதுகாப்பற்றது" எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் 2026 ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துடன் (KSCA) ஆர்சிபி நிர்வாகம் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
இது குறித்து விசாரித்த போது ஆர்சிபி நிர்வாகம், பெங்களூர் சின்னசாமி மைதானத்தை விட்டு வேறு மைதானங்களில் தங்கள் சொந்த ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் அளவுக்கான மைதானம் என்றால் சின்னசாமி மட்டுமே. அங்கும் ஆர்சிபி அணி விளையாடவில்லை என்றால் பெங்களூரை விட்டு, கர்நாடகாவை விட்டே வேறு இடத்துக்கு தான் செல்ல வேண்டும்.
அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மைதானம் ஆர்சிபியின் புதிய சொந்த மைதானமாக மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் மைதானமும் மற்றொரு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் விராட் கோலி விளையாடவிருந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியும் கடைசி நேரத்தில் சின்னசாமி மைதானத்தில் இருந்து மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபியைப் போலவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது சொந்த மைதானத்தை ஜெய்ப்பூரிலிருந்து மகாராஷ்டிராவின் புனே நகருக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடனான (RCA) நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் கடந்த ஆண்டு எழுந்த ஆதாரமற்ற மேட்ச் பிக்ஸிங் புகார்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் மாற்றங்களால், 2026 ஐபிஎல் சீசனில் பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் மைதானங்களில் உள்ளூர் ரசிகர்கள் தங்கள் விருப்பமான வீரர்களை நேரில் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.