IPL 2026: வைபவ் சூர்யவன்ஷியை வெறுப்பேற்றி அனுப்பி வைத்த டெல்லி கேப்பிடல்ஸ் பவுலர்.. 4 ரன்னில் அவுட்!
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியை சீண்டினார் டெல்லி அணியின் அனுபவ பந்துவீச்சாளர். நடப்பு ஐபிஎல் சீசனில் எதிரணி பந்துவீச்சாளர்களை கதறவிட்ட 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை கிளீன் போல்டாக்கிய டெல்லி வேகப்பந்து வீச்சாளர், அவரை மிக ஆக்ரோஷமாக வழியனுப்பி வைத்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி மற்றும் டெல்லி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் இடையே சிறு உரசல் எழுந்தது. ஆட்டத்தின் 2வது ஓவரை ஜேமிசன் வீச, அதில் சூர்யவன்ஷி நேராக ஒரு பவுண்டரியை விளாசி மிரட்டினார். இதனால் ஆவேசமடைந்த ஜேமிசன், அடுத்த பந்திலேயே தனது திறமையை காட்டினார்.

பவுண்டரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 5வது பந்தை ஜேமிசன் ஒரு இன்ஸ்விங் யார்க்கராக வீசினார். அந்த பந்தின் வேகத்தை கணிக்க தவறிய சூர்யவன்ஷியின் பேட் கீழே வருவதற்குள் பந்து பேட்டின் அடிப்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. நடப்பு தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யவன்ஷியை போல்டாக்கிய மகிழ்ச்சியில் ஜேமிசன் எல்லையற்ற உற்சாகமடைந்தார்.
பெவிலியன் நோக்கி திரும்பிய வைபவ் சூர்யவன்ஷியை பார்த்து அவர் மிக ஆக்ரோஷமாக கத்தியபடி வழியனுப்பி வைத்தார். ஜேமிசனின் இந்த வெறித்தனமான கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த சீசனில் சூர்யவன்ஷி உச்சகட்ட பார்மில் இருந்தார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 40.40 சராசரி மற்றும் 237.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 404 ரன்களை குவித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். இதில் 1 சதம், 2 அரைசதங்கள், 34 பவுண்டரிகள் மற்றும் 37 சிக்சர்களும் அடங்கும்.
இந்தப் போட்டியில் களமிறங்கும் போது அவர் 2 பிரம்மாண்ட உலக சாதனைகளை முறியடிக்க காத்திருந்தார். டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைக்க அவருக்கு 1 சிக்சர் மட்டுமே தேவைப்பட்டது. தற்போது இந்த சாதனை 843 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசிய கீரன் பொல்லார்ட் வசம் உள்ளது.
மேலும், 20 வயதுக்குட்பட்ட வீரர்களில் டி20 போட்டிகளில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சரித்திர சாதனையும் அவருக்காக காத்திருந்தது. கடந்த ஆண்டு முதல் இதுவரை ஐபிஎல் தொடரில் 17 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள அவர் 38.58 சராசரி மற்றும் 224.65 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 656 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் 4 ரன்களில் ஆட்டமிழந்ததால் அவரால் இந்த சாதனைகளை செய்ய முடியவில்லை.


Click it and Unblock the Notifications