IPL 2026: டி20 வரலாற்றிலேயே அதிவேக மைல்கல் ரெக்கார்டு.. சாய் சுதர்சன் உலக சாதனை படைத்தார்
கொல்கத்தா: குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடி வரும் இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளார். கிறிஸ் கெயில்கூட எட்ட முடியாத அந்த அசாத்திய மைல்கல் சாதனையை, மிகக் குறைந்த இன்னிங்ஸ்களிலேயே எட்டிப் பிடித்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அந்த இடதுகை பேட்ஸ்மேன்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். வெறும் 78 இன்னிங்ஸ்களிலேயே இந்த மைல்கல்லை எட்டி, ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் 85 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களைக் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது சாய் சுதர்சன் வெறும் 78 இன்னிங்ஸ்களில் இதனை எட்டியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் 80 இன்னிங்ஸ்களுக்கும் குறைவாகவே விளையாடி 3000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் டெவன் கான்வே (86 இன்னிங்ஸ்), கிறிஸ் கெயில் (87 இன்னிங்ஸ்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 248 ரன்கள் என்ற இமாலய இலக்கை குஜராத் துரத்தியபோது, சாய் சுதர்சன் 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் அவர் 36 ரன்களைக் கடந்தபோது இந்த வரலாற்றுச் சாதனையைத் தொட்டார். கார்த்திக் தியாகி வீசிய ஆட்டத்தின் 18-வது ஓவரில் அவர் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இந்திய வீரர்களில் முதலிடம்
இந்திய வீரர்களைப் பொறுத்தவரை சாய் சுதர்சனுக்கு அடுத்த இடத்தில் திலக் வர்மா (90 இன்னிங்ஸ்) உள்ளார். இவர்களைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் 91 இன்னிங்ஸ்களிலும், கே.எல்.ராகுல் 93 இன்னிங்ஸ்களிலும் 3000 ரன்களைக் கடந்துள்ளனர்.
24 வயதான சாய் சுதர்சன், தற்போது ஐபிஎல் 2026 தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 43.72 என்ற சராசரியுடன் 3017 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் 21 அரைசதங்களும் அடங்கும். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மட்டும் அவர் 53 இன்னிங்ஸ்களில் 2347 ரன்கள் எடுத்துள்ளதும், 148.54 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
