IPL 2026: சிஎஸ்கே தந்த ஆல்-ரவுண்டர் விலகல்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சாம் கரனால் பின்னடைவு
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான சாம் கரன் இடுப்புப் பகுதி காயம் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற வீரர்களின் பரிமாற்றத்தின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டனர். சாம் கரன் கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடி வெறும் 114 ரன்கள் குவித்து 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார். அந்த சீசனில் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் முறையாகக் கடைசி இடத்தைப் பிடித்து மோசமான சாதனையைப் பதிவு செய்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து அணியில் சாம் கரன் இடம்பெற்றிருந்தார். 27 வயதான அவர், இந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காகப் புதிய உத்வேகத்துடன் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த திடீர் காயம் அவரது பயணத்தில் பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே-வுக்கு லாபம்
மறுபுறம், ராஜஸ்தான் அணியிலிருந்து சென்னை அணிக்குச் சென்ற சஞ்சு சாம்சன் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். சுமார் 11 சீசன்களாக ராஜஸ்தான் அணியின் முக்கிய முகமாக இருந்து அதிக ரன்களைக் குவித்த அவர், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் படையை வெகுவாக வலுப்படுத்தியுள்ளார். அவர் சென்னை அணியின் தொடக்க வீரராக, இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற கேப்டன் ஆயுஷ் மாத்ரேவுடன் இணைந்து களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியின் தீவிர ரசிகரான சாம்சன், அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி தற்போது அணியில் இணைந்துள்ள அவருக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், 44 வயதான மூத்த வீரர் தோனிக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அல்லது ஓய்வு தேவைப்பட்டால், சில போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் சாம்சன் ஏற்க அதிக வாய்ப்புள்ளது. சாம் கரனின் விலகல் ராஜஸ்தான் அணிக்குக் கவலையை அளித்தாலும், சாம்சனின் அதிரடி ஆட்டத்தைக் காணச் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications