IPL 2026: ஐயா! தோனி ஐயா! மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த சஞ்சு சாம்சன்.. அதிர்ந்த சுப்மன் கில்
சென்னை: ஐபிஎல் 2026 தொடரில், குஜராத் டைட்டன்ஸ் எதிரான போட்டியில், சிஎஸ்கே விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் ஷுப்மன் கில்லை அவுட்டாக்கி அசத்தினார். இது தோனியின் ஸ்டம்பிங்கை நினைவுபடுத்தியதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
நூர் அகமது வீசிய ஒயிடு பந்தை ஃபிளிக் செய்யத் தவறிய கில், சரியான நேரத்தில் காலை கிரீஸுக்குள் வைக்கவில்லை. சாம்சன் பந்தை பிடித்தவுடன், கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்புகளை அடித்தார். இதனையடுத்து டிவி நடுவர் ரீப்ளேவை உறுதிசெய்த பின் , இதை அவுட் என உறுதி அளித்தார். 23 பந்துகளில் 33 ரன்கள் (ஒரு பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள்) எடுத்திருந்த கில் ஆட்டமிழந்தார்.

இது, கில் மற்றும் சாய் சுதர்சன் இடையேயான 58 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஐபிஎல் வரலாற்றில் 80க்கும் அதிகமான அவுட்களைப் பதிவு செய்துள்ள எட்டு விக்கெட் கீப்பர்களில் சஞ்சு சாம்சனும் ஒருவர். இந்த பட்டியலில், தோனி 278 ஆட்டங்களில் 201 அவுட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
கில் வெளியேறியபோதும், குஜராத் டைட்டன்ஸ் அணி 9.2 ஓவர்கள் முடிவில் 76/1 என்ற நிலையில், எளிதான ரன் சேஸிங்கில் வலுவாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டாப் ஆர்டர் சொதப்ப, தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் (6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்து அதிக ரன்கள் எடுத்தார்.
ஷிவம் துபே 22 (17), கார்த்திக் சர்மா 15 (9), ஜேமி ஓவர்டன் 18 (6) ரன்கள் எடுத்து அணிக்குத் துணை நின்றனர்.குஜராத் பந்துவீச்சில் ககிசோ ரபாடா 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, முகமது சிராஜ் 4 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனமாக செயல்பட்டார். இந்த சீசனில் இரு அணிகளும் தலா மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளன. கடந்த 2025ல், CSK, GTயை 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.


Click it and Unblock the Notifications