IPL 2026: சாம்சன் புதிய வரலாற்று சாதனை..அதிவேகமாக 5000 ரன்கள்.. ரெய்னா,ராகுல் ரெக்கார்ட் முறியடிப்பு
சென்னை: ஐபிஎல் வரலாற்றில் இன்று சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்தார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 5000 ரன்களை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்த மைல்கல்லை எட்ட சாம்சன் வெறும் 3555 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். இதன் மூலம், சுரேஷ் ரெய்னாவின் (3620 பந்துகள்) சாதனையை அவர் முறியடித்தார். மேலும் கே.எல். ராகுல் (3888) மற்றும் எம்.எஸ். தோனி (3691) ஆகியோரையும் அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஒட்டுமொத்தமாக, ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை எட்டிய பத்தாவது பேட்ஸ்மேன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்களில், இவர் எட்டாவது.

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சாம்சன் இன்று களமிறங்கினார். மும்பைக்கு எதிராக சதம் அடித்த உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கினார். குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா ஓவரில், ஒரு பவுன்ஸ் ஃபோர் அடித்து சஞ்சு சாம்சன் தனது 5000 ரன்களை நிறைவு செய்தார்.
எனினும், அதே ஓவரில் ஷார்ட் அண்டு ஒய்டு பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த தொடரில் சாம்சன் சதம் அடித்த 2 போட்டியிலும் சிஎஸ்கே வென்றது குறிப்பிடத்தக்கது.
குறைந்த இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டிய வீரர்களில் சஞ்சு சாம்சன் ஏழாவது இடத்தில் உள்ளார். அஜிங்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, எம்.எஸ். தோனி போன்ற சில முன்னணி வீரர்களை விடவும் அவர் குறைந்த இன்னிங்ஸ்களிலேயே இந்தச் சாதனையை எட்டியுள்ளார். சாம்சன் ஆட்டமிழந்த பிறகு உர்வில் பட்டேல், சர்பராஸ், பிரவீஸ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற சிஎஸ்கே அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.


Click it and Unblock the Notifications