மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்து அசத்தியிருக்கிறது. அதன்படி சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு சென்று இருக்கிறார்.
அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்திருக்கிறார். இதன் மூலம் தோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சன் எதிர்காலத்தின் சிஎஸ்கே கேப்டனாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக வரும் ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், எனக்குள் இருக்கும் மிகப்பெரிய கேள்வியே ருதுராஜ், சஞ்சு சாம்சனும் தொடக்க வீரராக விளையாடுவார்களா என்பது தான். இந்திய அணிக்காக இருக்கட்டும், ராஜஸ்தான் அணிக்காக இருக்கட்டும், சாம்சன் தொடக்க வீரராக தான் சிறந்து விளையாடி இருக்கின்றார். ஆனால் சிஎஸ்கே அணியில் அவருக்கு மூன்றாவது அல்லது நான்காவது இடம் தான் கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.
ஆயுஸ் மாத்ரே தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் சாம்சன் நடுவரிசைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. சிஎஸ்கே அணியில் தற்போது பதிரானா இல்லை இதனால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லீஸ் இடம்பெறுவார். இதனால் சிஎஸ்கே அணி ஒரு சுழற் பந்துவீச்சாளரையும், ஒரு நடுவரிசை வீரர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த இடத்திற்கு டேவிட் மில்லர், லிவிங்ஸ்டோன் ஆகியோர் விளையாட கூடும். இல்லை என்றால் பிரவீஸ், நான்காவது வீரராக கூட விளையாடலாம். இதே போன்று ரவி பிஸ்னாய் அல்லது ராகுல் சாகர் ஆகியோர் சிஎஸ்கே அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணியின் நூர் அகமதும், ஸ்ரேயாஸ் கோபாலும் மட்டும்தான் உள்ளனர். இதனால் பிஸ்னாய், சிஎஸ்கே அணிக்குள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.