IPL 2026: ஆஸ்திரேலியாவில் படுகாயம்.. 7 கிலோ எடை குறைந்தேன் ஆனால்.. மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தவுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது ஏற்பட்ட மோசமான காயத்தில் இருந்து மீண்டு வந்த கடினமான பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். கடந்த 2025 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சுமார் 2 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை.
இது குறித்து சண்டிகரில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "காயத்திற்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்புவது எப்போதும் சவாலானது. காயத்தால் நான் சுமார் 7 கிலோ எடையை இழந்தேன். அந்த எடையை மீண்டும் பெறுவதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. ஆனால் எனக்கு சவால்கள் பிடிக்கும். அந்த கடினமான கட்டத்தை வெற்றிகரமாக கடந்து வந்து, இப்போது மீண்டும் பஞ்சாப் அணிக்காக ஆடுவதில் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.

மீண்டு வந்த பயணம்
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ பயிற்சி மையத்தில் தனது உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார். விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக களமிறங்கிய அவர், 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து தனது அபாரமான ஃபார்மை நிரூபித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக இலக்கு
சர்வதேச போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் செயல்பட இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியது.
ஏற்கனவே, 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுப்பார் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள அவர், ஒரு கேப்டனாகவும் முழு வீச்சில் செயல்படத் தயாராகியுள்ளார்.


Click it and Unblock the Notifications