IPL 2026: ஸ்ரேயாஸ் ஐயர் செய்த செயல்.. வாயடைத்துப் போன ரோஹித், சூர்யகுமார்.. மாறிய ஆட்டம்!
மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பிடித்த மேஜிக் போன்ற கேட்ச் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வெளியேற்ற அவர் கையாண்ட வித்தை தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் அந்த கேட்ச்சை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
ஆட்டத்தின் 18-வது ஓவரை பஞ்சாப் அணியின் மார்கோ ஜான்சன் வீசினார். அப்போது களத்தில் இருந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஒரு பந்தை லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்குத் தூக்கி அடித்தார். பந்து எல்லைக்கோட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இடதுபுறமாக மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தைப் பிடித்தார்.

பந்தை கையில் பிடித்த வேகத்தில் அவர் எல்லைக்கோட்டிற்கு வெளியே விழப்போவதை உணர்ந்தார். உடனே தனது சமயோசித புத்தியைப் பயன்படுத்தி, காற்றில் பறந்தவாறே பந்தை அருகில் இருந்த சேவியர் பார்ட்லெட்டிடம் தூக்கி வீசினார். பார்ட்லெட் அதனைச் சரியாகப் பிடித்து கேட்சை முழுமையாக்கினார். புவிஈர்ப்பு விசையையே மீறி ஸ்ரேயாஸ் ஐயர் காற்றில் மிதந்து செய்த இந்தச் செயல் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்தது.
இந்த அபாரமான கேட்சைப் பார்த்த வர்ணனையாளர் ரவி சாஸ்திரி, "ஸ்ரேயாஸின் உடல் வலிமை மற்றும் சமயோசித புத்தி நம்பவே முடியாதது" என்று புகழ்ந்து தள்ளினார். கேட்சை முடித்த பிறகு, மும்பை மைதானத்தில் நிலவிய நிசப்தத்தைப் பார்த்து, ஸ்ரேயாஸ் ஐயர் தனது காதுகளில் கையை வைத்து "ஏன் சத்தம் வரவில்லை?" என்று கிண்டலாகச் சைகை காட்டினார்.
மும்பை அணியின் டக் அவுட்டில் அமர்ந்திருந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக ரோஹித் சர்மா தனது கைகளை உயர்த்தி, "இப்படியெல்லாம் கூட கேட்ச் பிடிக்க முடியுமா?" என்பது போல வியப்பில் உறைந்து நின்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறியது மும்பை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. குயின்டன் டி காக் 112 ரன்கள் விளாசி இருந்தும், ஹர்திக் பாண்டியாவின் மெதுவான ஆட்டத்தால் மும்பை அணியால் 200 ரன்களைத் தாண்ட முடியவில்லை. இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்த மும்பை அணியின் இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல், பீல்டிங்கிலும் ஸ்ரேயாஸ் ஐயர் காட்டிய அதிரடி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications