IPL 2026: ஜெயித்த பிறகு கேப்டன் சுப்மன் கில்லுக்கு 12 லட்சம் அபராதம்.. பிசிசிஐ அதிரடி.. என்ன காரணம்?
டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்த மகிழ்ச்சியில் இருந்த குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு, பிசிசிஐ 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி பந்துவீச குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. ஐபிஎல் தொடரின் நடத்தை விதிமுறை பிரிவு 2.22ன் படி இது குற்றமாகும்.

இதன்படி குறித்த நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததற்காக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் குஜராத் அணி செய்த முதல் தவறு இது என்பதால், 12 லட்சம் ரூபாய் மட்டும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய கேப்டன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். கடின இலக்கை துரத்திய டெல்லி அணி 20 ஓவரில் 209 ரன்கள் எடுத்து 1 ரன்னில் பரிதாபமாக தோற்றது. டெல்லி தரப்பில் கே.எல் ராகுல் 92 ரன்கள் மற்றும் டேவிட் மில்லர் 41 ரன்கள் எடுத்து போராடினர்.
இந்த சீசனில் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் கட்டும் 2வது கேப்டன் கில் ஆவார். ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இதே குற்றத்திற்காக 2 முறை அபராதம் கட்டியுள்ளார். மேலும், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டாலும், நடப்பு சீசனில் முதல் வெற்றியை ருசித்த திருப்தியில் சுப்மன் கில் உள்ளார். குஜராத் அணி தனது அடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications