IPL 2026: தனி ஆளாக நின்று கெத்து காட்டிய சுப்மன் கில்.. கொல்கத்தா அணிக்கு தொடரும் சோகம்
அகமதாபாத்: ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்ன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி நிர்ணயித்த 181 ரன்கள் இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு எட்டி, 2 பந்துகள் மீதமிருக்க வெற்றியைக் கைப்பற்றியது. கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 86 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
சாய் சுதர்சன் மற்றும் கில் இணை துவக்கத்திலேயே அதிரடி காட்டி 4.2 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது.சாய் சுதர்சன் 22 ரன்களில் சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஜோஸ் பட்லர் களமிறங்கி அதிரடியாக ஆடினார். பவர் பிளே முடிவில் குஜராத் அணி 71 ரன்கள் எடுத்திருந்தது. பட்லர் 25 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களும் எடுத்து வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

சுப்மன் கில்லின் 86 ரன்களுக்கு பிறகு வைபவ் அரோரா பந்துவீச்சில் கேமரூன் கிரீனின் சிறப்பான கேட்ச்சால் அவர் வெளியேறினார். இறுதி ஓவர்களில் கிளென் ஃபிலிப்ஸ் 19 ரன்கள் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர் ஸ்கோரை முன்னேற்றினர். ஃபிலிப்ஸ் கடைசி ஓவரில் ரமந்தீப் சிங் பந்துவீச்சில் வீழ்ந்தாலும், ஷாருக் கான் களமிறங்கி ராகுல் டெவாட்டியாவுடன் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். குஜராத் அணி 181/5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக, முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கேமரூன் கிரீனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கிரீன் 55 பந்துகளில் 79 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். குஜராத் பந்துவீச்சாளர்களான ககிசோ ரபாடா (3/29) மற்றும் முகமது சிராஜ் (2/23) ஆகியோர் துவக்கத்திலேயே கொல்கத்தா அணியை நிலைகுலையச் செய்தனர்.
பவர்பிளேவுக்குள் கொல்கத்தா அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர், கேமரூன் கிரீன் மற்றும் ரோவ்மன் பவல் (27 ரன்கள்) இணைந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர். அதனைத் தொடர்ந்து, அனுகுல் ராயுடன் சேர்ந்து கிரீன் மேலும் ரன்களைச் சேர்த்து சவாலான இலக்கை நிர்ணயித்தனர். இருப்பினும், கடைசி இரண்டு ஓவர்களில் கொல்கத்தா அணி வெறும் 8 ரன்களே எடுத்து ஆல் அவுட்டானது.


Click it and Unblock the Notifications