IPL 2026: விராட் கோலி கத்தியதால் கடுப்பான கில்.. வெற்றிக்கு பிறகு 9 வார்த்தையில் கிண்டல் பதிவு
ஐபிஎல் 2026 தொடரில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லை அவுட்டாக்கிய பிறகு, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆவேசமான முறையில் வழியனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து, குஜராத் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்பது வார்த்தைகளில் ஒரு பதிவு இட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலியும் ஷுப்மன் கில்லும் இந்திய அணிக்காக இணைந்து விளையாடும் சக வீரர்கள் என்ற வகையில் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தாலும், ஐபிஎல் களத்தில் இருவரும் எதிரெதிர் அணிகளில் மோதியபோது, கோலி கோபத்துடன் ஆக்கோரஷமாக நடந்து கொண்டார். அகமதாபாத்தில் கிட்டத்தட்ட 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கில்லை அவுட்டாக்கிவிட்டு கோலி வெளிப்படுத்திய கோபம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்த 156 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திச் சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். இந்த ஆட்டத்தில், கில் வெறும் 17 பந்துகளில் 43 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினார். பின்னர் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை அவர் வலுக்கட்டாயமாக அடிக்க முயல, கவரில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
முன்னாள் ஆர்சிபி கேப்டனான விராட் கோலி, இந்தப் பிடியை கச்சிதமாகப் பிடித்தார். உடனடியாக, உற்சாகம் பொங்க பந்தை மைதானத்தில் வீசிவிட்டு, ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மறுபுறம், ஏமாற்றமடைந்த ஷுப்மன் கில் மைதானத்தை விட்டு வெளியேறினார். கோலியின் இந்த ஆக்ரோஷமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களைத் தூண்டியது.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ஷுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலியுடன் தான் நிற்கும் புகைப்படம் உட்பட பல படங்களை வெளியிட்டார். அதில், "Play bold என ஆர்சிபி வசனத்தை குறிப்பிட்டு, துணிச்சலாக விளையாடுங்கள் இன்றிரவு அணியின் சிறப்பான துணிச்சலான செயல்பாடு" என்று குறிப்பிட்டு, நடப்பு சாம்பியன்களை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியதைக் கொண்டாடினார்.
முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த பிறகு, விராட் கோலியும் RCB-க்கு ஒரு நம்பிக்கையான தொடக்கத்தை வழங்கியிருந்தார். அவர் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில், ககிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில், ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தேவ்தத் படிக்கல் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆர்சிபி-யின் அதிகபட்ச ரன் அடித்த வீரராக விளங்கினார்.
போட்டியில் சிறிய சர்ச்சை ஒன்றும் ஏற்பட்டது. எட்டாவது ஓவரில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் (15 பந்துகளில் 19 ரன்கள்) அடித்த பந்தை, ஹோல்டர் எல்லைக்கோட்டுக்கு அருகே சிறப்பாகப் பிடித்தார். பந்து தரையை உரசியதாகத் தோன்றிய போதும், மூன்றாவது நடுவர் அந்த கேட்ச்சைப் பிடித்து சரியாக இருந்ததாக அறிவித்தார். இது குறித்து கோலி நடுவர்களுடன் நீண்ட நேரம் உரையாடியதையும், ஆர்சிபி பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர், ஹோல்டர் பந்தின் மீது முழு கட்டுப்பாடு கொண்டிருக்கவில்லை என்று வாதிட்டனர். இதனால் தான் கோலி போட்டி முழுவதும் கோபமாக காணப்பட்டார்.


Click it and Unblock the Notifications