IPL 2026: ராஜஸ்தானுக்கு மாவுக்கட்டு போட்ட சன்ரைசர்ஸ்.. முதல் தோல்வியை தழுவிய ராயல்ஸ்
மும்பை: ஐபிஎல் 2026 தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் அறிமுக பந்துவீச்சாளர்களான பிரஃபுல் ஹிங்கேவும், சகிப் ஹுசைனும் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி தங்கள் திறமையை நிரூபித்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பிரஃபுல் ஹிங்கே 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சகிப் ஹுசைன் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். அவர்களின் துல்லியமான மற்றும் அச்சுறுத்தும் பந்துவீச்சு, ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் வரிசையை சரித்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு ஒரு சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தார்.

எனினும், இஷான் கிஷன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து, ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை திறம்பட நிலைநிறுத்தினர். இஷான் கிஷன் அதிகபட்சமாக 91 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் அணியின் நடுவரிசையில் ஹெயின்ரிச் கிளாசன் 26 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அணிக்கு வலு சேர்த்தார்.
கிளாசனை துஷார் தேஷ்பாண்டே வீழ்த்தினார். தொடர்ந்து நிதீஷ் குமார் ரெட்டி சந்தீப் ஷர்மாவின் ஒரு ஓவரில் மூன்று அதிரடி சிக்ஸர்கள் உட்பட 24 ரன்களை விளாசி மிரட்டினார்.சலில் அரோரா ஒரு சிக்ஸர் அடித்து அணியின் ஸ்கோரை 200 ரன்களைத் தாண்ட உதவினார்.இறுதியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் என்ற ஒரு பெரிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.
அணியின் பேட்டிங் வரிசையில் கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் அதிரடியாகக் குவிக்கப்பட்டது, 217 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் துவக்கம் முற்றிலும் பேரிடராக அமைந்தது. அறிமுக வீரர் பிரஃபுல் ஹிங்கே தனது முதல் ஓவரிலேயே மாயாஜாலம் செய்தார். அவர் வைபவ் சூரியவன்ஷி, துருவ் ஜூரல், மற்றும் லுவான்ட்ரே ப்ரிடோரியஸ் ஆகிய மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களையும் டக் அவுட் செய்து வெளியேற்ற அதிர்ச்சியில் ராஜஸ்தான் ரசிகர்கள் முற்றிலும் உறைந்துபோனார்கள்.
ராஜஸ்தான் அணியின் நிலைமை மேலும் மோசமடைந்தது. சகிப் ஹுசைன், அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வீழ்த்த, ராஜஸ்தான் அணி மொத்தமாக இரண்டு ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 4 ரன்களுடன் தடுமாறியது. இது அணியின் துவக்கத்தையே சிதைத்தது. சற்று நேரத்திலேயே பிரஃபுல் ஹிங்கே, தனது நான்காவது விக்கெட்டாக, கேப்டன் ரியான் பராகையும் வெளியேற்றி ராஜஸ்தான் அணியை அச்சுறுத்தினார்.
இந்த இக்கட்டான மற்றும் குழப்பமான சூழ்நிலையிலும், டோனோவன் ஃபெரீரா ராஜஸ்தானுக்காகப் போராடினார். அவர் 44 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி, தனது முதல் ஐபிஎல் அரை சதத்தையும் பதிவு செய்தார். மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து, 118 ரன்கள் கொண்ட ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார்.
ஃபெரீரா தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஷிவாங் பந்துவீச்சில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். பின்னர் துபே வீசிய ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து தனது முதல் ஐபிஎல் அரை சதத்தைப் பதிவு செய்தார். . தொடர்ந்து, ரன்களைச் சேர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கான போராட்டத்தை முன்னெடுத்தார்.
மறுபுறம், மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவும் ஃபெரீராவுக்குத் துணையாகச் சிறப்பாக விளையாடினார். பொறுமையுடன் ரன்களைச் சேகரித்த அவர், மலிங்கா மற்றும் ஹுசைன் பந்துவீச்சில் திறம்பட பவுண்டரிகளை அடித்தார். இந்த இணை 118 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்து, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கான நம்பிக்கையை மீட்டெடுத்தது. எனினும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் இந்த கூட்டணியை உடைக்க கடுமையாகப் போராடினர்.
ஆனால், ஆட்டத்தின் போக்கை மாற்றும் விதமாக சன்ரைசர்ஸ் அணிக்கு சகிப் ஹுசைன் மீண்டும் பந்துவீச வந்து திருப்பத்தை ஏற்படுத்தினார். ரன்கள் சேர்க்கும் அவசரத்தில் இருந்த டோனோவன் ஃபெரீரா 69 ரன்கள், ஹுசைன் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்ட முனைந்து போல்ட் ஆனார். இதன்மூலம் 118 ரன்கள் கொண்ட அபாயகரமான பார்ட்னர்ஷிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, ராஜஸ்தான் அணியின் வெற்றிப் பாதைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார். ஹுசைனின் இந்த முக்கிய விக்கெட், ஹைதராபாத் அணிக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தது.
ஃபெரீராவின் வெளியேற்றத்திற்குப் பிறகு, எஷான் மலிங்கா பந்துவீச வந்து அச்சுறுத்தும் பவுன்சர் மூலம் ரவீந்திர ஜடேஜாவை வீழ்த்தி ராஜஸ்தானின் முடிவைத் தீர்மானித்தார். ஜடேஜா ஃபைன் எட்ஜ் கொடுத்து வெளியேறினார். இதற்கிடையில், ராஜஸ்தான் அணியின் டெயிலெண்டர் துஷார் தேஷ்பாண்டே தனியாளாகப் போராடினார்.
அவர் மலிங்கா வீசிய ஒரு பந்தை நேர்த்தியாக சிக்ஸருக்கு அனுப்பினார். அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டாலும், ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது.இறுதியாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.


Click it and Unblock the Notifications