IPL 2026: சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா மகத்தான சாதனை.. 18 பந்துகளில் அரைசதம்.. PBKSக்கு இமாலய இலக்கு
ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடினார். அவர் வெறும் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் இன்னிங்ஸின் முதல் ஆறு ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
முகலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடந்தது. துவக்க ஆட்டக்காரரான அபிஷேக், சக வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் (23 பந்துகளில் 38 ரன்கள், 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) இணைந்து முதல் விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 120 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான துவக்கத்தை கொடுத்தனர்.

ஐசிசி டி20ஐ பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அபிஷேக் ஷர்மா, தான் அடித்த எட்டு சிக்ஸர்களில் ஏழினை போட்டியின் முதல் ஆறு ஓவர்களுக்குள் பறக்கவிட்டார். இந்த சாதனை, ஐபிஎல் வரலாற்றின் 19 சீசன்களில் முதல் ஆறு ஓவர்களுக்குள் ஏழு சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற தனித்துவமான பெருமையை அவருக்கு வழங்கியது.
அபிஷேக்கிற்கு முன், சனத் ஜெயசூர்யா (மும்பை இந்தியன்ஸ், 2008), ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ், 2018), ஜானி பேர்ஸ்டோவ் (பஞ்சாப் கிங்ஸ், 2022) ஆகிய மூவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.ஜெயசூர்யா 2008 மே 14 அன்று மும்பை வான்கடேவில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக 114* ரன்கள் விளாசியபோது இதை செய்தார்.
பட்லர் 2018 மே 2 அன்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ்க்கு எதிராகவும், பேர்ஸ்டோவ் 2022 மே 13 அன்று மும்பை ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் ஆர்சிபிக்கு எதிராகவும் இதை செய்தனர்.அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார் அபிஷேக். ஐந்தாவது ஓவரில் விஜய்குமார் வைஷாக்கிற்கு எதிராக நான்கு சிக்ஸர்கள் விளாசி 24 ரன்கள் சேர்த்தார். அவரது ஏழாவது சிக்ஸ், ஆறாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சேவியர் பார்ட்லெட் வீசிய பந்தில் விழுந்தது.
ஓய்வறைக்கு திரும்பும் முன் அபிஷேக் வெறும் 18 பந்துகளில் மின்னல் வேக அரைசதம் அடித்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 20 பந்துகளுக்கும் குறைவான ஐந்து அரைசதங்களை விளாசிய உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.எஸ்ஆர்ஹெச் இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரின் மூன்றாவது பந்தில், ஷாஷாங்க் சிங் வீசிய பந்தில் அவுட்டாகி அபிஷேக் ஷர்மா பெவிலியன் திரும்பினார். கேப்டன் இசான் கிஷன் 17 பந்துகளில் 27 ரன்களும், ஹென்றிச் கிளாசன் 33 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தது. இதனால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் 219 ரன்கள் குவித்துள்ளது.


Click it and Unblock the Notifications