IPL 2026: "இந்த பவுலரை நான் பார்த்ததே இல்லை”.. SRH அணியிடம் வீழ்ந்த பிறகு ரியான் பராக் வேதனை
ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியடைந்த பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) கேப்டன் ரியான் பராக், எதிரணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் திறமையை வெகுவாகப் பாராட்டினார். ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்த 2026 ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கேப்டன் இஷான் கிஷனின் 44 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் 216 ரன்களைக் குவித்தது.
217 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள், ஹைதராபாத் அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர்களான பிரஃபுல் ஹிங்கே மற்றும் சாகிப் உசேன் ஆகியோரின் பந்துவீச்சில் சீட்டுக்கட்டு போல சரிந்தனர். ராஜஸ்தான் அணி வெறும் 3 ஓவர்களில் 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஜடேஜா 45 ரன்கள் மற்றும் டோனோவன் ஃபெரைரா 69 ரன்கள் குவித்து அமைத்த 100 ரன்கள் கூட்டணியால், அந்த அணி 159 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து ஆட்டநாயகன் விருது வழங்கும் விழாவில் பேசிய ரியான் பராக், "உணர்ச்சிகளை வெளிப்படுத்த எங்களுக்கு அதிக நேரம் இல்லை. அவர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்கள்; எங்களது கணிப்புகள் தவறாகிவிட்டன. புதிய பந்து ஆரம்பத்தில் சற்று ஒட்டி வந்தது, பளபளப்பு குறைந்ததும் ஆடுகளம் மெதுவாக மாறியது. ஆனாலும், நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்" என்றார்.
மேலும் அணியின் பேட்டிங் குறித்துப் பேசிய அவர், "9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த பிறகும், 160 ரன்கள் வரை வந்திருக்கிறோம் என்றால், அது எங்கள் அணியின் பேட்டிங் ஆழத்தைக் காட்டுகிறது. இது ஒரு சிறிய சறுக்கல் தான். இதை மறந்துவிட்டு அடுத்து கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கவனம் செலுத்துவோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.
ஹைதராபாத் அணியின் இளம் பந்துவீச்சாளர்கள் குறித்துக் கேட்டபோது, வெளிப்படையாகப் பதிலளித்த ரியான் பராக், "உள்ளூர் போட்டிகளில் இவர்களை நான் அதிகமாகப் பார்த்ததே இல்லை. பீகாருக்கு எதிரான போட்டியில் சாகிப்பை மட்டும் ஒருமுறை எதிர்கொண்டுள்ளேன். அவர்கள் இருவரும் இன்று மிக அற்புதமாகப் பந்துவீசினார்கள். உள்ளூர் ரசிகர்கள் தங்களது பெயரைக் கூச்சலிடும் நெருக்கடியான சூழலிலும், அவர்கள் துல்லியமாகப் பந்துவீசிய விதம் அருமையாக இருந்தது" எனப் பாராட்டினார்.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 4 வெற்றிகளைக் குவித்திருந்த ராஜஸ்தான் அணி, தனது முதல் தோல்வியைச் சந்தித்தாலும், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications