15 வயதிலேயே ஐபிஎல் சாதனை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு காத்திருக்கும் அந்த ஆபத்து? ஸ்ரீசாந்த் பகீர் எச்சரிக்கை!
சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றி இப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. வெறும் 15 வயதிலேயே உலகின் மிக முக்கியமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார். இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அவருக்கு இப்போதே புகழ் வெளிச்சம் தேடி வந்துள்ளது.
ஆனால், புகழுடன் சேர்ந்து ஆலோசனைகளும் கவனச்சிதறல்களும் வருவது இயல்பு. இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்த், இளம் வீரர் வைபவ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இளம் வயதிலேயே கிடைக்கும் வெற்றிகளால் வரும் சவால்களில் இருந்து வைபவைப் பாதுகாக்குமாறு அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷியிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு முன்னணி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், வைபவ் தனது கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மற்றவற்றை குடும்பத்தினரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் ஸ்ரீசாந்த் அறிவுறுத்தினார். ரவிஷ் பிஷ்ட் உடனான அந்தப் பேட்டியில் ஸ்ரீசாந்த் கூறுகையில், "வைபவ், இந்த பேட்டியை நீ பார்க்கிறாய் என்றால், எனது வேண்டுகோள் இதுதான். இந்த மேனேஜர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, உனது கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்து. உன் தந்தை மற்றும் குடும்பத்தினர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள். தொழில்முறை மேனேஜர்களிடம் இருந்து தள்ளியே இரு" என்று கூறினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது வைபவின் வணிக ரீதியான வாய்ப்புகளைக் கவனித்து வருகிறது. வைபவ் மற்றும் அவரது குடும்பத்தினர் விளையாட்டு உலகின் வணிக ரீதியான பக்கங்களுக்குப் புதியவர்கள் என்பதால், ஸ்ரீசாந்தின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
வைபவை பாராட்டிய ஸ்ரீசாந்த்
ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து, ஐந்து தனிநபர் விருதுகளை வென்று, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 தொடர்களில் இடம் பிடித்த வைபவை ஸ்ரீசாந்த் வெகுவாகப் பாராட்டினார். "வைபவையைப் பற்றி எவ்வளவு பேசினாலும் போதாது. இளம் வீரர்களுக்கு, கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என கனவு காணும் அனைவருக்கும் அவர் ஒரு முன்மாதிரி. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் ஷர்மா வரிசையில், வைபவ் காட்டியுள்ள அர்ப்பணிப்பு அபாரமானது" என்றார்.
கொரோனா காலத்தில் வீட்டின் மாடியில் பயிற்சி செய்த வைபவின் வீடியோக்களை நினைவுகூர்ந்த ஸ்ரீசாந்த், அவரது தந்தை மற்றும் பயிற்சியாளர்களின் தியாகத்தையும் பாராட்டினார். "கொரோனா காலத்திலும் மாடியில் கடுமையாக பயிற்சி செய்த வீடியோக்கள் வைரலாகின. அவரது தந்தை மற்றும் பயிற்சியாளர்களுக்கு எனது மரியாதை. வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாமல் தினமும் நான்கு மணி நேரம் பயணம் செய்து, விடாமுயற்சியுடன் தினசரி 750 முதல் 1,000 பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி செய்துள்ளார். அவருக்கு ஓய்வு எடுப்பதிலேயே விருப்பமில்லை. அவரைப் பார்ப்பது வியப்பாக இருக்கிறது" என்று ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications