கோடிக்கணக்கான பணம் போச்சு.. ஐபிஎல் வீரர்கள் தேர்வில் ஏமாற்று வேலை.. சுனில் கவாஸ்கர் ஆவேசம்
மும்பை: 2026 ஐபிஎல் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு அணிகள் உள்ளூர் டி20 லீக் போட்டிகளில் விளையாடிய வீரர்களைக் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து தங்களது பணத்தை வீணடித்துள்ளதாகவும், இதில் ஏமாற்று வேலை நடந்துள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த 2026 ஐபிஎல் ஏலத்தில் உள்ளூர் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காகப் பல வீரர்கள், போதிய உள்நாட்டுப் போட்டி அனுபவமில்லாத நிலையிலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோரை தலா 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதேபோல், மங்கேஷ் யாதவை பெங்களூரு அணி 5.20 கோடி ரூபாய்க்கும், தேஜஸ்வி தஹியாவை கொல்கத்தா அணி 3 கோடி ரூபாய்க்கும், முகுல் சௌத்ரியை லக்னோ அணி 2.60 கோடி ரூபாய்க்கும் வாங்கின.

சொதப்பிய ஆட்டம்
ஆனால், இவர்களில் கார்த்திக் சர்மா மட்டுமே 11 போட்டிகளில் 295 ரன்கள் குவித்து ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடினார். பிரசாந்த் வீர் 6 போட்டிகளில் 90 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். முகுல் சௌத்ரி 10 போட்டிகளில் 170 ரன்கள் எடுத்தார். தேஜஸ்வி தஹியா 2 போட்டிகளில் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், பெங்களூரு அணி 5.20 கோடிக்கு வாங்கிய மங்கேஷ் யாதவ் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
கவாஸ்கர் முன்வைக்கும் விமர்சனம்
இது குறித்துத் தனது ஸ்போர்ட்ஸ்டார் கட்டுரையில் எழுதியுள்ள சுனில் கவாஸ்கர், "மாநில மற்றும் உள்ளூர் லீக் போட்டிகளில் சிக்ஸர் விளாசிய பல வீரர்கள், ஐபிஎல் தொடரில் சர்வதேச தரம் வாய்ந்த பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். உள்ளூர் லீக் போட்டிகளின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரம் மிகவும் குறைவானது. வீரர்களின் ஏஜெண்டுகளின் பேச்சைக் கேட்டு ஏமாறாமல், திறமையான வீரர்களைக் கண்டறியும் திறமை அணிகளின் ஸ்கவுட்களுக்கு இருக்க வேண்டும். இல்லையெனில் அணிகள் தங்களது பணத்தை வீணடிப்பதைத் தவிர்க்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
ஏஜெண்டுகளின் ஏமாற்று வேலை
மேலும் பேசிய கவாஸ்கர், "ஒரு வீரரைக் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துவிட்டு, அவருக்கு 2 போட்டிகளுக்கு மேல் வாய்ப்பு வழங்கவில்லை என்றால், அந்த அணியின் ஆலோசகர்களும் ஸ்கவுட்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றுதான் அர்த்தம். ஒரு போட்டியில் மட்டும் தற்செயலாகச் சிறப்பாக விளையாடும் வீரர்களை அடுத்த ஆண்டும் ஏலத்தில் எடுக்கின்றனர். இது போன்ற வீரர்களைக் கொண்டு 4 அணிகளை உருவாக்கலாம்" என்று ஆவேசமாக எழுதியுள்ளார்.
உள்ளூர் போட்டிகளின் தரம் மற்றும் ஐபிஎல் தொடரின் சர்வதேச தரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள மலையளவு வித்தியாசத்தை உணர்ந்து அணிகள் செயல்பட வேண்டும் என்ற கவாஸ்கரின் இந்த அறிவுரை கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
