பிசிசிஐ கொடுக்கும் 10 சதவீத கமிஷனை வாங்கிக்கொண்டு ஐபிஎல்-ஐ விமர்சிப்பதா? சுனில் கவாஸ்கர் ஆவேசம்
மும்பை: ஐபிஎல் தொடரை விமர்சிக்கும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களுக்கு, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வழங்கும் 10 சதவீத தொகையை வசதியாக மறந்துவிட்டு குறை கூறுவதாக அவர் சாடியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடர் முழுவதும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடினார். ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. சர்வதேச போட்டிகளை விட உள்ளூர் டி20 லீக் தொடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறி, இங்கிலாந்தின் மைக்கேல் வான், நியூசிலாந்தின் சைமன் டவுல் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் ஆர்ச்சரையும், ஐபிஎல் தொடரையும் கடுமையாக விமர்சித்தனர்.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில், டி20 லீக் தொடர்கள் வீரர்களுக்கு சிறந்தது தான். ஆனால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விட உள்ளூர் தொடர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றார்.
நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் கூறுகையில், ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டு சம்பளம் வாங்கும் ஆர்ச்சர், நாட்டின் முக்கிய டெஸ்ட் போட்டியில் விளையாடாதது அபத்தமானது. முந்தைய காலங்களில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி போன்ற நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரின் போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் டெஸ்ட் போட்டிக்காக சிவப்பு நிற பந்தில் பயிற்சி பெறுவார்கள். ஆனால் ஆர்ச்சர் அப்படி செய்யாதது டெஸ்ட் கிரிக்கெட் மீது அவருக்கு ஆர்வம் இல்லை என்பதையே காட்டுகிறது என விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுனில் கவாஸ்கர் தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், ஐபிஎல் தொடரையும் விமர்சிப்பது வெளிநாட்டினருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது, அவர்களின் ஒட்டுமொத்த சம்பளத்தில் 10 சதவீத தொகையை பிசிசிஐ சம்பந்தப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்குகிறது. இதை எந்த விமர்சகர்களும் பேசுவதில்லை.
இங்கிலாந்தில் நடக்கும் தொடரோ அல்லது ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 லீக் தொடரோ வெளிநாட்டு வாரியங்களுக்கு இதுபோன்று எந்த ஒரு சதவீத தொகையையும் வழங்குவதில்லை. ஐபிஎல் தொடர் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் பவுண்டுகளை மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்கி வருகிறது. இந்திய கிரிக்கெட் மற்றும் ரசிகர்களின் பணத்தை வைத்து தான் பல வெளிநாட்டு வாரியங்கள் தங்கள் கஜானாவை நிரப்புகின்றன.
இதையெல்லாம் மறந்துவிட்டு ஐபிஎல் தொடரையும், இந்திய கிரிக்கெட்டையும் குறை கூறுவதை அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். நீங்கள் எவ்வளவு தான் கீழே தள்ள நினைத்தாலும், இந்திய கிரிக்கெட் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பதை விமர்சகர்கள் விழித்துக்கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கவாஸ்கர் ஆவேசமாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
