IPL 2026:15 வயது வைபவ் சூர்யவன்ஷி-யிடம் சிக்கி சின்னாப்பின்னமான ஆர்சிபி.. நடப்பு சீசனில் முதல் தோல்வி
கவுஹாத்தி: ஐபிஎல் 2026 தொடரின் 16வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சீசனில் இரு அணிகளும் தோல்வியே காணாத நிலையில், கவுஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடந்த இப்போட்டியில் பெங்களூரு அணி முதல் தோல்வியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் 12 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கைக் கடந்தது.
போட்டி மழையால் தாமதமாகத் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. கேப்டன் ரஜத் படிதார் 40 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அ அணிக்கு பலம் சேர்த்தார். இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்த உதவினார்.

பெங்களூரு தரப்பில், விராட் கோலி 16 பந்துகளில் 32 ரன்களும், தேவ்தத் படிக்கல் 14 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர் ஃபில் சால்ட் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஃபில் சால்ட் மற்றும் படிக்கல் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் கோலி மற்றும் க்ருனால் பாண்டியா விக்கெட்டுகளை எடுத்தார். பிரிஜேஷ் ஷர்மாவும், ரவீந்திர ஜடேஜாவும் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
202 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான தொடக்கத்தை அளித்தார். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஷ் ஹேசல்வுட்டின் பந்துவீச்சை எதிர்கொண்டு இரண்டு சிக்ஸர்களை விளாசிவிட்டு, 13 ரன்களுக்கு வெளியேறினார். இருப்பினும், சூர்யவன்ஷி தனது தாக்குதலைத் தொடர்ந்தார்.
யஷஸ்வி ஆட்டமிழந்த பின்னர், அபினந்தன் பந்துவீச்சிலும், பிறகு ஹேசல்வுட் பந்துவீச்சிலும் தொடர்ந்து சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசினார். வெறும் 15 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த வேகமான அரை சதம், ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாக அமைந்தது, மேலும் அவர் தனது முந்தைய சாதனையையும் சமன் செய்தார். பவர்பிளேயின் 6வது ஓவரில் துருவ் ஜூரல் 24 ரன்கள் அடித்து, ராஜஸ்தானை 6 ஓவர்களில் 97/1 என்ற வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.
மேற்கொண்டு தனது ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தொடர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, 26 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளை உள்ளடக்கிய 78 ரன்கள் குவித்து, க்ருனால் பாண்டியாவின் பந்துவீச்சில் வெளியேறினார். ஷிம்ரன் ஹெட்மையர் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ரெய்ன் பராக் ஹேசல்வுட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறியதால், ராஜஸ்தான் 134/4 என்ற நிலையில் தடுமாறியது.
போட்டியின் நடுப்பகுதியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், துருவ் ஜூரல் அணியின் வெற்றிக்கான நம்பிக்கையைத் தக்கவைத்தார். அவர் 25 பந்துகளில் அரை சதம் அடித்து, ராயல்ஸ் அணியை இலக்கை நோக்கி செலுத்திச் சென்றார். பின்னர், ரவீந்திர ஜடேஜாவுடன் கைகோர்த்து அசத்தினார். இந்த இணை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கான அஸ்திவாரத்தை இட்டது. பெங்களூரு பந்துவீச்சாளர் அபினந்தன் சிங் 3 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து படுமோசமாக ரன்களை வாரியிறைத்தார்.
துருவ் ஜூரல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உட்பட 81 ரன்கள் குவித்து, ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications