வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜாக்பாட்.. ODI அணியில் இடம் அளித்த பிசிசிஐ.. இலங்கை முத்தரப்பு தொடரில் வாய்ப்பு
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங் மூலம் பெரிய அளவில் ரன் குவித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிசிசிஐ தற்போது மிகப்பெரிய வாய்ப்பை அவருக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய சீனியர் அணியில் நுழைவதற்கு முந்தைய மிகப்பெரிய படியாக இந்த வாய்ப்பு கருதப்படுகிறது.
இலங்கையில் வரும் ஜூன் 9 முதல் 21 வரை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் இலங்கை 'ஏ', ஆப்கானிஸ்தான் 'ஏ' மற்றும் இந்தியா 'ஏ' ஆகிய 3 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடருக்கான இந்தியா 'ஏ' அணியில் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக ஒருநாள் போட்டிகளுக்காக அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டி20 தொடரில் மட்டுமே விளையாடிய அவருக்கு இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும். திலக் வர்மா தலைமையிலான இந்த அணியில் ரியான் பராக் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். இவர்களுடன் பிரியான்ஷ் ஆர்யா, சூர்யான்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங் போன்ற அதிரடி ஐபிஎல் நட்சத்திரங்களும் அணியில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த முக்கிய வாய்ப்பு கிடைக்க அவரது அசாத்திய திறமையே முக்கிய காரணமாகும். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 6வது முறையாக கோப்பையை வென்று கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என அனைத்து வெளிநாட்டு மண்ணிலும் அவர் சதம் விளாசி மிரட்டியுள்ளார். தற்போது ஐபிஎல் தொடரிலும் தனது ஆதிக்கத்தை தொடரும் அவர், 11 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட 440 ரன்களை குவித்து எதிரணிகளை கதிகலங்க வைத்துள்ளார்.
இந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்பதால், ஜூன் 26 மற்றும் 28 தேதிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனினும், ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி இந்தியா 'ஏ' அணியில் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைபவ் சூர்யவன்ஷியை உடனடியாக இந்திய சீனியர் அணிக்கு கொண்டு வர வேண்டும் என மைக்கேல் வாகன், மைக்கேல் கிளார்க், ஸ்ரீகாந்த் மற்றும் ஷிகர் தவான் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் பிசிசிஐக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேநேரம் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கார்லோஸ் பிராத்வைட் ஆகியோர் அவருக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என பொறுமை காக்க அறிவுறுத்தியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரைப் பதிக்க இந்த இளம் வீரர் தயாராகி வருவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
