IPL 2026: 15 வயதில், 15 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம்.. அலங்கார பந்தலில் சிஎஸ்கே பந்துவீச்சு
கவுஹாத்தி: ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, 15 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் 2026 சீசனை ஒரு அதிரடியான சாதனையைப் பதிவுசெய்து தொடங்கினார். கவுஹாத்தி பர்சபரா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிவேக அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
கவுஹாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங்கே தங்களுக்கு செய்ய தெரியாது என்ற பாணியில், களத்திற்கு வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் சிஎஸ்கே அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். இதில், 15 வயது வீரரான சூர்யவன்ஷி சிஎஸ்கே பந்துவீச்சை பட்டையை கிளப்பினார். அவருடைய இன்னிங்சில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும்.
சூர்யவன்ஷியின் இந்த 15 பந்து அரைசதம், யூசுப் பதான் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மே 24, 2014), சுனில் நரைன் (கேகேஆர் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மே 07, 2017), நிக்கோலஸ் பூரன் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ஆர்சிபி, ஏப்ரல் 10, 2023), மற்றும் ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் (டெல்லி கேபிடல்ஸ் சார்பாக இருமுறை: ஏப்ரல் 20, 2024 மற்றும் ஏப்ரல் 27, 2024) ஆகியோரின் சாதனைகளை சமன் செய்தது.
15 வயதே ஆன இந்த இளம் வீரரை விட வேகமாக அரைசதம் அடித்தவர்கள் மொத்தம் நான்கு பேர் மட்டுமே. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளிலும் (RR vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மே 11, 2023), கே.எல். ராகுல், பேட் கம்மின்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 14 பந்துகளிலும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications