IPL: வைபவ் சூர்யவன்ஷி நேரடி சவால்.. "நான் கிரீஸில் இருக்கும் வரை..".. பவுலர்களுக்கு மறைமுக வார்னிங்
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எத்தனையோ ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள், போயிருக்கிறார்கள். ஆனால், 15 வயதே ஆன ஒரு சிறுவன், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களைப் பார்த்து, "நான் ஆடுகளத்தில் இருக்கும் வரை ஆட்டம் என் கையில் தான் இருக்கும்" என்று சவால் விடுவது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் துருப்புச் சீட்டான வைபவ் சூர்யவன்ஷி விடுத்துள்ள இந்த அதிரடி எச்சரிக்கை, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராகக் களம் கண்டு வரும் வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கோலி போன்ற ஜாம்பவான்களுடன் ஆரஞ்சு தொப்பியை வெல்ல போட்டி போட்டு வருகிறார். பந்து தனது ஏரியாவிற்குள் வந்தால், அது யாராக இருந்தாலும் சரி, பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்புவதையே அவர் தனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ளார். இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 246 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 236.54 என்பது தான் பல ஜாம்பவான்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஆக்ரோஷமான ஆட்டம் குறித்துப் பேசிய வைபவ், "நான் எவ்வளவு நேரம் ஆடுகளத்தில் இருக்கிறேனோ, அவ்வளவு நேரமும் எனது திறமையால் ஆதிக்கம் செலுத்தி விளையாடுவேன். நான் கிரீஸில் இருக்கும் வரை எதிரணியிடம் இருந்து வெற்றியைப் பறிக்கும் சக்தி என்னிடம் உண்டு" என்று மிகவும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஒரு வகையில் இது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் அமைந்துள்ளது.
தனது எதிர்காலக் கனவு குறித்துப் பகிர்ந்து கொண்ட அவர், "இது குறித்து எனது தந்தையிடம் பேசினேன். அவர் சொன்னார், எனது கனவில் பாதி தான் இப்போது நனவாகியிருக்கிறது, மீதி பாதி இன்னும் பாக்கி உள்ளது என்று. இந்திய சீனியர் அணிக்காக உலகக்கோப்பையில் விளையாடி, நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம். ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும் அதே கனவு தான் எனக்கும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதுவரை தனது ஐபிஎல் வாழ்க்கையில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ், 498 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். வெறும் 226 பந்துகளை மட்டுமே சந்தித்திருக்கும் அவர், அதில் 42 பவுண்டரிகளையும் 44 இமாலய சிக்சர்களையும் விளாசியுள்ளார். 15 வயதிலேயே இத்தகைய முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி, விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. ஐபிஎல் தொடரில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, அவர் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications