IPL 2026: காலில் விழுந்த வைபவ் சூர்யவன்ஷி.. உடனே நெஹ்ரா செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கு முன்பாக ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் காலில் விழுந்து ஆசி பெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை அளித்தது, ரசிகர்கள் வைபவ் சூர்யவன்ஷியின் மரியாதை அளிக்கும் செயலை பாராட்டி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மைதானத்தில் நெஹ்ராவைக் கண்டதும் சூர்யவன்ஷி மரியாதையுடன் ஓடிச் சென்று அவரது காலில் விழ முயன்றார். ஆனால் நெஹ்ரா அவரை உடனடியாகத் தடுத்து, மேலே தூக்கி அன்பாகக் கட்டித் தழுவினார். மூத்த வீரரின் இந்த பாசமான அரவணைப்பைக் கண்ட வைபவ் சூர்யவன்ஷி மகிழ்ச்சியில் புன்னகைத்தார்.

அதே பயிற்சி முகாமில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பேசிக்கொண்டிருந்ததை சூர்யவன்ஷி குறும்பாக ஒட்டுக்கேட்டதும் சுவாரஸ்யமாக அமைந்தது. மூத்த வீரர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஏற்பட்ட ஆர்வத்தில் வைபவ் இவ்வாறு செய்தார்.
வைபவ் சூர்யவன்ஷியைப் பொறுத்தவரை குஜராத் அணிக்கு எதிரான போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த ஆண்டு இதே குஜராத் அணிக்கு எதிராகத் தான் அவர் வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையைப் படைத்தார். இந்த ஆண்டிலும் அவர் அதே சிறப்பான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் சென்னை அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.
ஐபிஎல் தொடர் மட்டுமின்றி, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று தந்தார் சூர்யவன்ஷி. முதல் சீசனில் கலக்கிய இளம் வீரர்கள் இரண்டாவது சீசனில் தடுமாறுவார்கள் என்ற கிரிக்கெட் விமர்சகர்களின் கணிப்பைத் தனது முதிர்ச்சியான ஆட்டத்தால் அவர் பொய்யாக்கியுள்ளார்.
சென்னைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பேசிய சூர்யவன்ஷி, எதிரணி பந்துவீச்சாளர்கள் தன்னிடம் ஆக்ரோஷமாகப் பந்துவீசுவார்கள் எனப் பலரும் கூறிய நிலையில், பயிற்சியாளர்கள் தன் மீது முழு நம்பிக்கை வைத்து சூழ்நிலைக்கு ஏற்ப தனது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தச் சொன்னதே வெற்றிக்குக் காரணம் எனத் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications