IPL 2026: சஞ்சு சாம்சன் இடத்தை பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. 2026 ஐபிஎல் தொடரில் கச்சேரி இருக்கு
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2026 ஏலம் முடிந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அனுபவ வீரர் சஞ்சு சாம்சன் இடத்தை 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி நிரப்ப உள்ளார். மேலும், இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொத்தமாக மாறி உள்ளது. குறிப்பாக அந்த அணியின் முகமாக இருந்த கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே-வுக்கு அனுப்பிவிட்டு, சிஎஸ்கே அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை 'ட்ரேட்' முறையில் உள்ளே கொண்டு வந்துள்ளது.
சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக மாறியிருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. 2026 ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கப்போவது வைபவ் சூர்யவன்ஷி தான்.

ஐபிஎல் புள்ளிவிவரங்களின்படி, வைபவ் சூர்யவன்ஷியின் ஸ்ட்ரைக் ரேட் 206.56 ஆக உள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் ஜோடி இதுவரை 7 இன்னிங்ஸ்களில் இணைந்து ஆடியுள்ளனர். இவர்களின் சராசரி பார்ட்னர்ஷிப் ஸ்கோர் 60.28. எனவே, பவர் ப்ளே ஓவர்களில் இந்த 'லெஃப்ட்-லெஃப்ட்' (Left-Left) காம்பினேஷன் எதிரணி பவுலர்களை விளாசித் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சுவின் 3-வது இடம் யாருக்கு?
ராஜஸ்தான் அணியில் பல வருடங்களாக 3வது இடத்தில் கலக்கியவர் சஞ்சு சாம்சன். இப்போது அந்த இடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த இடத்திற்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் சரியான தேர்வாக இருப்பார்.
இருப்பினும், சிஎஸ்கே-வில் இருந்து வந்துள்ள சாம் கரன், சுழற்பந்து வீச்சை வெளுத்து வாங்குவதில் வல்லவர். ஸ்பின்னர்களுக்கு எதிராக இவரின் ஸ்ட்ரைக் ரேட் 150-க்கும் மேல் உள்ளது. எனவே, சாம் கரனை 3வது இடத்தில் களமிறக்கி அதிரடியை கூட்டவும் ராஜஸ்தான் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
4வது இடத்தில் ரியான் பராக் களமிறங்குவது உறுதி. கடந்த காலங்களில் அந்த இடத்தில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஃபினிஷிங் ரோலில் வெஸ்ட் இண்டீடு அதிரடி மன்னன் ஷிம்ரான் ஹெட்மையர் (ஸ்ட்ரைக் ரேட் 168.95) மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இது அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கிறது.
பந்துவீச்சு கூட்டணி
வேகப்பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தலைமை தாங்குவார். அவருடன் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சந்தீப் சர்மா மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நண்ட்ரே பர்கர் ஆகியோர் இணைகின்றனர். சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் மற்றும் ஜடேஜா கூட்டணி எதிரணியை திணறடிக்கும்.
ஐபிஎல் 2026-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச பிளேயிங் 11:
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
வைபவ் சூர்யவன்ஷி
சாம் கரன்
ரியான் பராக்
துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்)
ஷிம்ரான் ஹெட்மையர்
சுபம் துபே
ரவீந்திர ஜடேஜா
ரவி பிஷ்னோய்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
சந்தீப் சர்மா
இம்பேக்ட் பிளேயர்: சுபம் துபேவுக்கு பதிலாக பந்துவீச்சின் போது நண்ட்ரே பர்கர் களமிறங்குவார்.


Click it and Unblock the Notifications