IPL 2026: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மெகா சாதனை.. கொல்கத்தா அணியின் முதல் இந்திய வீரராக வரலாறு
அகமதாபாத்: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். கொல்கத்தா அணிக்காக பந்துவீச்சில் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே செய்து இருந்த ஒரு மைல்கல் சாதனையை வருண் சக்கரவர்த்தி செய்து இருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக விளையாடி 100 விக்கெட்டுகளைக் கடந்த ஜாம்பவான்கள் பட்டியலில் வருண் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் போட்டியில், குஜராத் அணி பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 10-வது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் ஒரு பந்தில் குஜராத் அணியின் நட்சத்திர பேட்டர் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தனது 100-வது விக்கெட்டை அவர் பதிவு செய்தார். தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, தனது அபாரமான சுழற்பந்து வீச்சால் இந்த இமாலய இலக்கை எட்டியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை, இதுவரை வெளிநாட்டு வீரர்களான சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவர் மட்டுமே 100 விக்கெட்டுகளைக் கடந்திருந்தனர். தற்போது அந்த வரிசையில் இணைந்த 3-வது வீரர் வருண் சக்கரவர்த்தி ஆவார். மேலும், அந்த அணிக்காக இந்தச் சாதனையைச் செய்த முதல் இந்திய வீரர் இவரே. இதுவரை 87 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வருண், 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் முழுப் பட்டியல் இதோ:
- சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 194 போட்டிகள் - 196 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/19
- ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்) - 150 போட்டிகள் - 183 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/10
- லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்) - 122 போட்டிகள் - 170 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/13
- புவனேஷ்வர் குமார் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 145 போட்டிகள் - 157 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/19
- ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 186 போட்டிகள் - 143 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/16
- டுவைன் பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 116 போட்டிகள் - 140 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 4/42
- யுஸ்வேந்திர சஹால் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 113 போட்டிகள் - 139 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 4/25
- ஹர்பஜன் சிங் (மும்பை இந்தியன்ஸ்) - 136 போட்டிகள் - 127 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/18
- ஆண்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 133 போட்டிகள் - 122 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/15
- அமித் மிஷ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) - 99 போட்டிகள் - 106 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/17
- அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்) - 87 போட்டிகள் - 102 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/32
- வருண் சக்கரவர்த்தி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 87 போட்டிகள் - 100 விக்கெட்டுகள் - சிறந்த பந்துவீச்சு: 5/20


Click it and Unblock the Notifications