IPL 2026: தரம்சாலாவில் வெளுத்து வாங்கிய ஆர்சிபி.. வெங்கடேஷ் ஐயர், கோலி அதிரடி.. திணறிய பஞ்சாப்
தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரின் 61-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 222 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தது. வெங்கடேஷ் ஐயரின் அதிரடி அரைசதம் மற்றும் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்த பெரிய ஸ்கோரை எட்டியது ஆர்சிபி அணி..
தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க வீரராகக் களம் இறங்கிய ஜேக்கப் பெத்தேல் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இருப்பினும், அடுத்து வந்த வீரர்கள் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

கோலி - படிக்கல் ஜோடி அபாரம்
இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினர். பவர்பிளே ஓவர்களில் பெங்களூரு அணி 61 ரன்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய படிக்கல் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் தனது கிளாசிக் ஆட்டத்தைத் தொடர்ந்த விராட் கோலி 37 பந்துகளில் 58 ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து வெளியேறினார்.
வெங்கடேஷ் ஐயர் ருத்ரதாண்டவம்
விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு வெங்கடேஷ் ஐயர் பொறுப்பைத் தன்வசப்படுத்திக் கொண்டார். பஞ்சாப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த அவர், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைப் பறக்கவிட்டார். 40 பந்துகளைச் சந்தித்த வெங்கடேஷ் ஐயர் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி நேரத்தில் டிம் டேவிட் 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஸ்கோரை 220-ஐ தாண்டச் செய்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது.
பஞ்சாப் பந்துவீச்சு சரிவு
பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ப்ரீத் ப்ரார் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாகல் தலா 1 விக்கெட்டைப் பெற்றனர். ஆனால், லோக்கி பெர்குசன் 3 ஓவர்களில் 43 ரன்களையும், சாகல் 3 ஓவர்களில் 42 ரன்களையும் வாரி வழங்கியது அந்த அணிக்குத் பின்னடைவாக அமைந்தது.


Click it and Unblock the Notifications