IPL 2026: மெர்சல் விஜய் ஸ்டைலில் அரைசதத்தை கொண்டாடிய தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர்
தரம்சாலா: ஐபிஎல் 2026 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெங்கடேஷ் ஐயர் ருத்ரதாண்டவம் ஆடினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் விளாசி, ஆர்சிபி அணியை 20 ஓவர்களில் 222/4 என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.
தமிழகத்தை பாரம்பரியமாக கொண்ட வெங்கடேஷ் ஐயர், மத்திய பிரதேசத்தில் வசித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான இவர், தனது அரை சதத்தை விஜய்யின் மெர்சல் படத்தின் ஸ்டைலில் கொண்டாடினார்.

நடிகர் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், வெங்கடேஷ் ஐயரின் இந்த கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும், அவருடைய ஆட்டத்தை கொண்டாடி வருகின்றனர். இடது கை ஆட்டக்காரரான வெங்கடேஷ், கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்சிபியை முதலில் பேட் செய்ய அழைத்தது. விராட் கோலியுடன் ஜேக்கப் பெத்தேல் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.எனினும், பெத்தேல் ஏமாற்றமளித்து, 7 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து, பஞ்சாப் பந்துவீச்சாளர் ஹர்ப்ரீத் பிராரிடம் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து 4வது வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர் என 73 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 183 என்ற அளவில் உள்ளது. நடப்பு சீசனில் வெறும் 3 இன்னிங்ஸ் மட்டுமே பேட்டிங் செய்துள்ள வெங்கடேஷ் ஐயர் மொத்தமாக 114 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய ஸ்டரைக் ரேட் 162 ஆகும்.


Click it and Unblock the Notifications
