அப்ப 7 கோடி போச்சா.. ஆர்சிபி வாங்கியவுடன் வெங்கடேஷ் ஐயர் செய்த சொதப்பல்.. ரசிகர்கள் ஏமாற்றம்
மும்பை: 2026 ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் 7 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் தொடரில் படுமோசமாகச் சொதப்பி வருவது ஆர்சிபி ரசிகர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில், வெறும் 8 ரன்களில் அவர் பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
மத்தியப் பிரதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர், திங்கட்கிழமை நடைபெற்ற கேரளாவிற்கு எதிரான போட்டியில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கினார். ஆர்சிபி அணி இவரை வாங்கிய பிறகு ஆடும் முதல் சில போட்டிகள் என்பதால், வானவேடிக்கை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே ஒரு சோகமான சம்பவம் நடந்தது. சக வீரர் ஹிமான்ஷு மந்த்ரி உடன் ஏற்பட்ட குழப்பத்தால், அவசரப்பட்டு ஒரு ரன் ஓட முயன்று, வெறும் 8 ரன்களில் ரன்-அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் வெங்கடேஷ் ஐயர். அதிரடியாக ஆடுவார் என்று பார்த்தால், இப்படி அஜாக்கிரதையாக விக்கெட்டைப் பறிகொடுத்தது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
23 கோடியிலிருந்து 7 கோடிக்கு வீழ்ச்சி:
வெங்கடேஷ் ஐயரின் ஐபிஎல் பயணம் கடந்த ஓராண்டாகவே இறங்குமுகத்தில் தான் உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை மலைக்க வைக்கும் தொகையான ரூ.23.75 கோடிக்கு வாங்கியிருந்தது. ஆனால் அந்த ஆண்டு 7 இன்னிங்ஸ்களில் வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.
2026 ஐபிஎல் ஏலத்துக்கு முன் மோசமான ஃபார்ம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை விடுவித்தது. சமீபத்தில் நடந்த ஏலத்தில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இவரை வாங்க போட்டியிட்டன. இறுதியில் ஆர்சிபி அணி ரூ.7 கோடிக்கு இவரைத் தட்டித் தூக்கியது. விலை மளமளவெனக் குறைந்தாலும், 7 கோடி என்பது பெரிய தொகைதான். அதற்கு ஏற்றவாறு அவர் தனது பழைய ஃபார்மில் உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ளது.
"பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா?"
இதற்கிடையில், வெங்கடேஷ் ஐயர் குறித்து முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அவர் கூறுகையில், "வெங்கடேஷ் ஐயர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர் தான். ஆனால், ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் அவர் உடனடியாக இடம்பிடிப்பாரா என்பது சந்தேகமே. ஏனெனில் ஆர்சிபி ஒரு முழுமையான அணியாக உள்ளது. அங்கு நுழைவது கடினம்" என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 56 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள வெங்கடேஷ் ஐயர், 1468 ரன்கள் (சராசரி 29.12) எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்கள் அடங்கும். திறமை இருந்தாலும், களத்தில் அதைக் காட்டத் தவறினால், 7 கோடிக்கு வாங்கிய ஆர்சிபி பெஞ்சில் அமர வைக்கவும் தயங்காது என்பதே நிதர்சனம். ஐபிஎல் தொடங்குவதற்கு முன் வெங்கடேஷ் ஐயர் ஃபார்முக்கு திரும்புவாரா?.


Click it and Unblock the Notifications