தோல்வி அடைந்தாலும் வைபவ் சூர்யவன்ஷியை நெகிழவைத்த விராட் கோலி.. போட்டிக்கு பின் என்ன நடந்தது?
கவுகாத்தி: 2026 ஐபிஎல் தொடரில் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இந்த ஆட்டத்திற்குப் பின் அவருக்கு விராட் கோலி அளித்த பரிசு இணையத்தில் பரவி வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கேப்டன் ரஜத் படிதாரின் 63 ரன்கள் மற்றும் விராட் கோலி, வெங்கடேஷ் ஐயரின் அதிரடியால் 20 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, சிறுவன் சூர்யவன்ஷி தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார். முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சை துணிச்சலாக எதிர்கொண்டு நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்டார்.

வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 78 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி, ராஜஸ்தான் அணியின் வெற்றியை எளிதாக்கினார். இதன் மூலம் 4 போட்டிகளில் 200 ரன்கள் கடந்து, அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான 'ஆரஞ்சு தொப்பியை' அவர் தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவர் அடிக்கும் 2-வது 15 பந்து அரைசதம் இதுவாகும்.
போட்டி முடிந்ததும் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சூர்யவன்ஷியை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது சூர்யவன்ஷி தனது ராஜஸ்தான் ராயல்ஸ் அணித் தொப்பியில் கோலியிடம் ஆட்டோகிராப் கேட்டார். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட கோலி, "அன்புள்ள வைபவ், மிகச் சிறப்பாக விளையாடினாய்" (Dear Vaibhav, well done) என்ற வாசகத்தை எழுதி தனது கையெழுத்திட்டு அந்தச் சிறுவனை நெகிழ வைத்தார்.
சூர்யவன்ஷியின் அதிரடி மற்றும் துருவ் ஜூரலின் 81 ரன்கள் உதவியுடன், ராஜஸ்தான் அணி 12 பந்துகள் மீதமிருக்கையிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடர்ச்சியான 4-வது வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது.


Click it and Unblock the Notifications