IPL 2026: கொஞ்சம் கூட சந்தோசமா இருக்க விட மாட்றாங்க.. லக்னோ அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு
மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இலங்கை ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, தொடர் முழுவதும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடை தசைப்பிடிப்பு காயம் காரணமாக, அவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் விலகிவிட்டார். அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மாற்று வீரரை அறிவிக்க லக்னோ அணி தயாராகி வருகிறது.
2026 டி20 உலகக் கோப்பையின் போது ஏற்பட்ட தொடை தசைப்பிடிப்பு காயத்திலிருந்து ஹசரங்கா இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக அவர் எந்தவித போட்டி கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை; பந்துவீசவும் முடியவில்லை. இது குறித்து, பேசிய எல்எஸ்ஜி-யின் இயக்குநர் டாம் மூடி , "வனிந்து ஹசரங்கா எங்களுடன் சேரமாட்டார், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மாற்று வீரரைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்" என்று உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட ஹசரங்காவை, எல்எஸ்ஜி. 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. மேலும் ஒரு சிக்கலாக, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு கடுமையான உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹசரங்கா இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாற்று வீரர் யார் என்ற கேள்விக்கு, தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஜார்ஜ் லிண்டே ஒரு முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 34 வயதான இந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர், 250 டி20 போட்டிகளில் விளையாடி, 7.42 என்ற எகானமி விகிதத்தில் 218 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில், அவர் 136.68 ஸ்ட்ரைக் ரேட்டில் 2746 ரன்கள் குவித்துள்ளார்.
லிண்டே சமீபத்தில் மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் ஐந்து போட்டி கொண்ட டி20 தொடரில் பங்கேற்றார். அந்த நான்கு ஆட்டங்களில், அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தி, பேட்டிங்கில் 70 ரன்கள் சேர்த்தார். மேலும், இந்தியாவில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பையிலும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றிருந்தார்.
காயம் குறித்த இந்த பின்னடைவுகளுக்கு மத்தியிலும், எல்.எஸ்.ஜி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆரம்ப தோல்விக்குப் பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸை கடைசி பந்து வரை நீடித்த த்ரில்லர் போட்டியிலும் வீழ்த்தி, தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்தது. மூன்று போட்டிகளில் நான்கு புள்ளிகளுடன், எல்.எஸ்.ஜி. தற்போது ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications